Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!

Su.tha Arivalagan
Apr 25, 2026,04:53 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


கயல்  ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில்  துவக்கப்பள்ளி ஆசிரியை. அவர் கணவர் கதிர் வேல் , ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர். அவர்களுக்கு நிலா என்று ஒரு மகள், பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். 


மாதச் சம்பளம் வந்த மறுநாளே வாடகை, மளிகை, நிலாவின் கல்விக்கட்டணம் எனப் பிரித்து வைத்தால், கையில் மிஞ்சுவது வெறும் 'சில்லறை' நம்பிக்கைகள் மட்டும்தான்.


ஒரு மாலை நேரத்தில் கதிர் முகம் வாடிப் போய் வீடு திரும்பினார். அவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், ஆட்குறைப்பு நடவடிக்கையில் கதிரின் வேலையும் பறிபோனதாக கூறி , மிகவும் வேதனைப்  பட்டுக் கொண்டிருந்தான். 


இதை அறிந்த  கயல்  "இனி எப்படி நிலாவோட காலேஜ் பீஸ் கட்டப்போறோம்? வீட்டு வாடகை?  மற்ற செலவுகளுக்கு எனது ஊதியம் போதாதே .‌  என்ன செய்வது  என்று மனதிற்குள் பதறினாள்.


கதிர்  வேல் சோர்ந்து போய் அமர்ந்திருந்தபோது, கயல்  தன் அச்சத்தை  தன்னுள் மறைத்துக்கொண்டு அவர் அருகே அமர்ந்தாள்.


"கதிர்,  உங்க வேலை போயிருக்கலாம், ஆனா உங்க திறமை போகல. "இதுவும் கடந்து போகும்'  என்ற மந்திரத்தை நாம் எப்போதும் சொல்வோம்ல? அந்த தைரியம் இப்போதான் நமக்கு வேணும். நிலாவுக்குத் தெரிய வேண்டாம்,  தெரிந்தால் அவ படிப்பு கெட்டுடும்," என்றாள்.




ஆனால், நிலா எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள். மறுநாள் காலை அவள் தன் பெற்றோரை அழைத்து ஒரு விஷயத்தைக் கூறினாள்.


"அப்பா, நீங்க கவலைப்படாதீங்க.   நீங்கள் நேற்று பேசியதை நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். முக்கியமா, என்னோட மெடிக்கல் கோச்சிங் கிளாஸ் பீஸை இப்போதைக்குக் கட்ட வேண்டாம். நான் யூடியூப் மூலமாவே படிச்சுப்பேன்." என்றாள்.


இருந்தாலும் கதிர் சும்மா இருக்க விரும்பவில்லை. தன் அனுபவத்தை வைத்து சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் ஒரு சிறிய 'கன்சல்டிங்' சேவையை வீட்டிலிருந்தே தொடங்கினார்.


அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வாக்குள்ள ஒரு நபர், கதிரிடம் வந்து ஒரு முறையற்ற வேலையைச் செய்யச் சொன்னார். வரியைத் தட்டிகழிக்க சில போலி ரசீதுகளைத் தயாரித்துக் கொடுத்தால் பெரிய தொகை தருவதாக ஆசை காட்டினார்.


"சார், என் கிட்ட இப்போ பணம் இல்லாமல்  இருக்கலாம். ஆனா, ஒரு தப்பான முன்னுதாரணத்தை என் மகளுக்கு நான் விட்டுட்டுப் போக விரும்பல. நேர்மையா சம்பாதிக்கிறதால் கிடைக்கும் கஞ்சி நிம்மதியைக் கொடுக்கும்."


கயலும் தன் பங்கிற்கு மாலையில் தையல் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினாள். குடும்பமே  சேர்ந்து    தன்னம்பிக்கையுடன்  ஓய்வில்லாமல் உழைத்தது. ஆனால் அதில் சோர்வு இல்லை; ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு மட்டுமே இருந்தது. ஆறு மாதங்கள் கடந்தன.


கதிரின் நேர்மையான அணுகுமுறையைப் பார்த்து, அந்தப் பகுதியின் வணிகர் சங்கம் அவரிடமே அனைத்துக் கணக்குகளையும் ஒப்படைத்தது.


நிலா கடினமாக உழைத்து, கோச்சிங் கிளாஸ் போகாமலேயே மருத்துவப் படிப்பில் அரசுப் ஒதுக்கீட்டில் இடம் பிடித்தாள்.


வெற்றிச் செய்தியுடன் வந்த நிலா, வீட்டின் வாசலில் ஒரு சிறிய பலகையில்  அந்த மந்திர சொல்லினை எழுதி வைத்திருந்தாள்: "இதுவும் கடந்து போகும்!"


"அப்பா,  நாம கஷ்டப்பட்ட அந்த நாட்கள் கடந்து போயிடுச்சு. ஆனா அந்த நாட்கள் நமக்குக் கத்துக்கொடுத்த தன்னம்பிக்கையும், நீங்க கடைப்பிடிச்ச நேர்மையும் என்னைக்குமே நம்ம கூடவே இருக்கும்," என்றாள் நிலா.


கதிர்வேல்   நிலா , கயல்  இருவரின் கைகளைப் பற்றிக்கொண்டான். நடுத்தரக் குடும்பத்தின் ஆகப்பெரிய பலமே, இக்கட்டான சூழலில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் புரிந்து கொண்டு  செயல்படுவது தான். 


பொருளாதாரச் சரிவுகள் தற்காலிகமானவை. ஆனால், நேர்மையும் , தன்னம்பிக்கையும், குடும்ப ஒற்றுமையும் இருந்தால், எந்தப் பெரும் மலையையும்  எளிதாக கடந்துவிடலாம்  . கயல், நீயும் நிலாவும் ,என்னை புரிந்து கொண்டு  ஒத்துழைப்பு  தந்ததால்  தான்,  இந்த இக்கட்டான நிலைமையை நாம்  எளிதில் கடந்து வந்தோம்.  "இதுவும் கடந்து போகும்"  என்ற உங்களின்  தன்னம்பிக்கை எனக்கு மன வலிமையை கொடுத்தது.


கதிர், கயல் இருவரின் கழுத்தினை கட்டிக்கொண்டு,  எதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு, நிலா மகிழ்ச்சி  பிரவாகத்தில் மூழ்கி போனாள்.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)