நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்..‌ நாளை போர்க்கால ஒத்திகை.. மத்திய அரசு அறிவிப்பு!

Manjula Devi
May 06, 2025,04:56 PM IST

டெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு போர் ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.


கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொளியாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது. 





இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதட்டமான சூழல் நீடித்து வரும் நிலையில், நாளை போர்க்கால ஒத்திகை நடைபெற இருப்பதாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 


அதன்படி, நாட்டில் 244 மாவட்டங்களில்  நாளை போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என  சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வான்வழி தாக்குதலில் எச்சரிக்கை ஒலியை ஒலிக்கவிட்டு சோதனை நடத்த வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வரும் இடங்களில் அவர்களை எப்படி வெளியேற்றுவது என்பது தொடர்பான அவசரகால வெளியேற்ற ஒத்திகை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மேலும் பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த பாதுகாப்பு போர்க்கால ஒத்திகை பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு-காஷ்மீரில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக   தமிழ்நாட்டில் கல்பாக்கம், அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம் ,ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.