சித்திரையும் வெயிலும்!
- ஆ.உஷாதேவி
வெளி வராண்டாவில் ஈசி சேரில் தலைசாய்த்து படுத்திருந்த வேலாயுதத்திற்கு வயது 65 இருக்கும் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவரின் உடல் கட்டு இளமையாக இருந்தது.
தன் எதிரே video game விளையாடிக் கொண்டிருக்கும் பேரன் தேஜஸ்-யை பார்த்து பெருமூச்சு விட்டார்.
ஏன் இப்ப உள்ள பசங்க எல்லாம் வெளியிலே போய் விளையாட மாட்டேன்றாங்க என்று மனதில் எண்ணிக்கொண்டே தன் பால்ய கால நினைவுகளை அசைப்போட்டார்..
கோடை விடுமுறை விட்டாச்சு என்றாலே அம்மாவும் அப்பாவும் தெருத்தெருவாக தேட வேண்டும் வேலாவை.
வேலா..வேலா..எங்க இருக்கிற உன் கால்ல என்ன பாதசக்கரமா மாட்டியிருக்கு ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்கிற..
இந்த வேகாத வெயிலில் போய் விளையாடிட்டு இருக்கிற... இரண்டு வாய் சாப்பிட்டு போய் விளையாடு என்று அம்மாவின் அன்புத் தொல்லை அவ்வப்போது கேட்கும் சுப்ரபாதம் மாதிரி..
செவ்வானம் சிவக்கும் வரை விளையாடிட்டு வந்தால் அப்பாவின் கடுமையான அடியிலிருந்தும் வேலாவால் தப்பிக்க முடியாது.
வேலாவின் சேஷ்டைகளுக்கு அளவேயிருக்காது..
பனைமரத்தில் ஏறி நுங்கு பறிப்பது, குளத்தில் மீனை பிடித்து ,அதை நெருப்பில் வாட்டி சாப்பிட்டா அம்புட்டு ருசியாய் இருக்கும். மாங்காய் தோப்பில் மாங்காய் பறித்து உப்பு தடவி கடிச்சா புளிப்பு அப்படி இருக்கும்.. குளத்திலே கும்மாளமிட்ட நாட்களும் உண்டு, புழுதியில் புரண்டு, வெயிலில் வரண்டு,இளவட்ட காளைகளாக கபடி விளையாடியது என்று நீண்டு செல்லும் விடுமுறை கொண்டாட்டங்கள்...
பகல் நேர நண்பனான கதிரவனின் கதிர்களின் அரவணைப்பில் இருந்த நாட்களை நினைவுகளை மீட்டெடுக்கையில் ஒரு வித நெகிழ்ச்சியாக இருந்தது வேலாயுதத்திற்கு....
ஆனா.. இப்ப உள்ள நிலைமையே வேற ... வெளியில் போய் விளையாடக் கூடாது, கிருமி தொற்றிக்கொள்ளும், வெயிலே படாமல் வளரும் தன் பேரனின் பால்ய பருவம் நினைத்து மனதில் நொந்துக்கொண்டார்..
தேஜஸ்... உள்ளே வா...விளையாடியது போதும்.. என்ற மருமகளின் குரல் தன் செவிகளிலும் தொட்டுச்சென்றது.
தலைமுறை மாற்றம் என்பது இதுதானா ???
(எழுத்தாளர் ஆ.உஷாதேவி, இடைநிலை ஆசிரியர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர்)