அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

Su.tha Arivalagan
Jan 19, 2026,05:03 PM IST

-கவிதா அறிவழகன்


அமைதி 

சத்தம் இல்லாமல் வந்தபோது....

சத்தங்கள் எல்லாம்

என்னை விட்டு விலகிய போது,

ஒரு ஆழமான நிசப்தம்

என் நெஞ்சுக்குள்

மெல்ல வந்து அமர்ந்தது.


எந்தக் கதையும் சொல்லாமல்,

எந்தக் கவிதையும் உரைக்காமல்,

எந்தக் கதவையும் தட்டாமல்,

அமைதி,

ஒரு ஆத்மத் தோழி போல

என் அருகில் வந்து உட்கார்ந்தது.




அந்த தோழி

வலிகளைப் பற்றி பேசவில்லை,

மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,

அழியாத நினைவுகளை

தூண்டவும்

இல்லை.


அதற்கு மாறாக,

ஒரு புன்னகை மட்டும்

மௌனமாய் அங்கே

பூத்தது.


அப்போது தான் புரிந்தது---

அமைதி என்பது

வெற்றிக்குப் பின்

வருவது அல்ல,

தாங்கும் மனப்பக்குவம்

வந்த பின் மெல்ல கனிவது

அமைதி.


சத்தம் இல்லாமல் 

வந்தபோது நான்

அதைத் தடுத்து நிறுத்தவில்லை,

ஏனெனில்,

அந்த அமைதியில் தான்,

நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்

முதன்முறையாக

'நான்' நானாகவே

இருந்தேன்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)