பாசத்தின் வாசம் (குறுங்கதை)
- ஷீலாராஜன், சென்னை
படிக்கட்டில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்டது.
"பார்த்து பார்த்து மெதுவா" என்று சேகர் பாட்டியை கையை பிடித்து மெதுவாக அழைத்து வந்தான். எனக்கு ஒரே ஆச்சரியம் ! பாட்டி என் வீட்டுக்கா இந்த நேரத்துலயா!!!? என்று வியப்போடு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சேகர் என்னைப் பார்த்து சிரித்தான். எப்படியாவது ஷீலா வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று பாட்டி ரெண்டு மூணு நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்கப்பா அதுதான் கூட்டிட்டு வந்தேன் என்றான் . பெரும்பாலும் பாட்டியை நான் படுத்து இருந்தே பார்த்து பழக்கப்பட்டிருக்கிறேன்.. கூன் வளைந்து நடக்கவே சிரமப்படும் பாட்டி படி ஏறி எங்கள் வீட்டுக்கு வந்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.
'வாங்க பாட்டி' என்று நானும் பாட்டியை கைத்தாங்கலாக அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தேன். பாட்டி என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். கண்கள் கலங்கி இருந்தன .எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சேகர்? என்றேன். சேகர் சிரித்தபடி என்னை பார்த்துக் கொண்டே இருந்தான்.
பாட்டி சேகரை தொட்டு 'அதை எடு சேகர்' என்றார். என்ன எடுக்க சொல்கிறார்கள் என்று நானும் சேகரையே கவனித்துக் கொண்டிருந்தேன். சேகர் பையில் இருந்து ஒரு கவரை எடுத்து பாட்டியிடம் கொடுத்தான் .பாட்டி அதை வாங்கி கலங்கிய கண்களோடு என் கையில் கொடுத்தார். என்ன பாட்டி என்றேன். பாட்டி எதுவும் பேசவில்லை. கண்கள் பேசின.
என்னவாக இருக்கும் என்று என் மனம் யோசித்தது.. அப்பொழுது பாட்டி சொன்னவை தான் என் வாழ்க்கையில் நான் திரும்பத் திரும்ப நினைத்து பார்த்த வார்த்தைகள்.. உனக்கு என்னால கொடுக்க முடிந்ததை கொடுத்து இருக்கேன், உனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். எனக்கு பாட்டி எதற்காக இதை கொடுத்திருக்கிறார் ? கேள்வி மேல் கேள்விகள் எனது மனதிற்குள். விடை பாட்டியிடம் இருந்து வந்தது.
என்னுடைய சின்ன மகன் வீட்டுக்கு போறேன் பா . எனக்கு உன்ன பாக்கணும்னு தோணுச்சு. அதான் சேகரை தொண தொணன்னு கேட்டு இங்க வந்தேன்.... நான் பேசுறது புரியவே இல்ல, அப்படின்னு என்னோட வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நீ ஒவ்வொரு முறையும் எனக்காக நான் சொல்றத புரிஞ்சுகிட்டு அதை கடிதமா எழுதி என்னுடைய மகள்களுக்கும் மகனுக்கும் அனுப்ப உதவி செஞ்ச இல்ல அதுக்கு தான் இந்த பரிசு என்றார்...
அந்த மாதிரி எழுத உனக்கு ஒரு மணி நேரம் கூட ஆயிடும். ஆனா நீ பொறுமையா கேட்டு எழுதுவது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்குமா என்றார் ..என் கண்களும் கலங்கிவிட்டது. எதுக்கு பாட்டி இதெல்லாம் என்றேன். என்னுடைய அன்பையும் பாசத்தையும் பரிமாறிக் கொள்ள நீ எழுதிய கடிதங்கள் தான் எனக்கு உதவியாக இருந்துச்சு. நான் பேசுவது போனில் புரியவில்லை என்று சொல்லும் மகள்களும் மகன்களும் நீ எழுதிய கடிதத்தால் தான் இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்ற பாட்டி "நீ நல்லா இருப்பமா" என்று ஆசீர்வாதமும் செய்தார்.
எனக்கு இது பிடிக்கும் என்று எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டேன். உனக்கு தெரியாம உங்க அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் என்றார் பாட்டி.. நான் பாட்டியை கட்டி அணைத்துக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு பாட்டி மகனின் வீட்டுக்கு சென்று விட்டார்..
ஆண்டுகள் உருண்டோடின. நானும் திருமணம் ஆகி வேறு ஊருக்கு சென்று விட்டேன். சில வருடங்கள் கழித்து பாட்டி மறைந்த செய்தியை கேட்டு வருத்தமுற்ற போதிலும் பாட்டி கொடுத்த "பன் பட்டர் ஜாம்" வாசமும் சுவையும் இன்று வரை ஞாபகத்தில் உள்ளது.. என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய பரிசாக கருதுவது பாட்டி கொடுத்த பன் பட்டர் ஜாமை தான்...
பல்லில்லாத பாட்டி கொடுத்த பரிசை பல ஆண்டுகள் கழித்தாலும் மறக்கவே முடியவில்லை.... பாட்டியை பார்க்க வருபவர்கள் கொடுக்கும் காசில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்து சேகரிடம் கொடுத்து பாட்டி எனக்கான பரிசு வாங்கி இருந்தார் என்பதை சேகர் என்னிடம் கூறிய போது பன் பட்டர் ஜாமின் சுவை மனதிலும் நாக்கிலும் நிலையாக தங்கி விட்டது.
(குறுங்கதையை எழுதிய ஷீலா ராஜன் அடிப்படையில் ஒரு ஆசிரியை. கடலூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றியவர். தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் ஆங்கில குழுவில் இடம் பெற்றுள்ளார். 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கான காணொலிகளில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். திருவண்ணாமலை ரத்னா செந்தில்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் நடத்திய புறநானூறு உலக சாதனையிலும் திருக்குறளுக்கான கதை எழுதும் உலக சாதனை நிகழ்வில் பங்கேறுள்ளார்)