மரம் செடி கொடி மேல் மோகம் கொண்டு.. மேகம் விடும் தூது மழை...!

Su.tha Arivalagan
Nov 21, 2025,12:20 PM IST

- அ.வென்சி ராஜ்


நில மகளை சந்திக்க

நட்பால்  வான்மகள் விடும் தூது மழை....


மழையின் நட்பு நீர் திவலைகளை மண்மகள் மனமார ஏற்று விளைச்சலை பன்மடங்காய் தருகிறாள்....


மரம் செடி கொடி மேல் 

மோகம் கொண்டு மேகம் விடும் தூது மழை ... 


மழையின் உயிர் நீரை மரம் வாங்கி மகிழ்வாய் ஏற்று உயிர் வளியாய் தருகிறாள்... 




பல் உயிர் மேல் 

காதல் கொண்டு  மரம் விடும் தூது மழை...


மரத்தின் காதலால் மழை பெற்று பல்லுயிர்கள் பெருகி   பூகோளம் மகிழ்வால் நிறையுது.... . 


கடல் மகள் தன் புவி தாய்க்கு 

தன் நீரை பாசத்தால் நன்னீராய் அனுப்பும் தூது மழை.....  


மழை நீரின்  பாசப் பெருந்துளிகளை  தன்னுள் வாங்கிய கடலன்னை   புவிதனை தான் மூடி பல்லுயிர் காக்கிறாள்... 


ஆறு குளம் ஏரி நிறைக்க 

அன்பால் ஆதவன் விடும் தூது மழை....


அன்பின் மழைத் துளிகளால் ஆறு குளம் ஏரி தான் நிரப்பி  அழகாய் காக்கிறது மக்களை... 


இப்படி, 


பாசத்தால். ..

அன்பால்...

காதலால்...

மோகத்தால்....

நட்பால்...

கசிந்து உருகி மழையாகி வரும்...

எனதருமை நீர் துளியே...

உனக்காக காத்திருக்கும் எங்களுக்காய்...

காலமெல்லாம் நீ  வருவாயே.....

மாரி வந்ததென..

மனமெல்லாம் மகிழ்ந்து..

மயில்களாய்  தோகை விரித்தாட...

உனையே வரமாய் கேட்கின்றோம்...

நிலம் குளிர. ..

நீர் பெருக....

உழுதவன் மனம். ..

போதும்...

என சொல்லும் வரை மட்டும்... 

நீ வருவாயே.... 


(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,  சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)