தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 2.25% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2025 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது.
இதனையடுத்து வினாத்தாள் திருத்தம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளும் விரைவாக முடிவடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.
அதன்படி,10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியானது. இதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 93.80% மாணவர்கள் பாஸ் ஆகியுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவியர் 95.88 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த தேர்தலில் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024ம் ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.26 சதவீதமாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.63 சதவீத மாணவ மாணவியரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97.99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.