இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
சென்னை: தனுஷ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தின் டிரெய்லர் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் 4வது படம் இட்லி கடை. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இதற்கு முன்னர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய 3 திரைப்படங்கள் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ளன. இட்லி கடை திரைப்படத்தில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளதை அறிமுக போஸ்டர் வெளியிட்டு அவரே தெரிவித்திருந்தார்.
இந்த படத்தில், அருண் விஜய், நித்யா மெனன், சமூத்திரக்கனி, ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி டிரைலர் வெளியீட்டு விழா வரும் செப்., 20ம் தேதி கோவையில் ஃப்ரோஜன் மாலில் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.