திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
சென்னை: திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் 2 மாதத்தில் எந்த புரட்சியும் செய்ய முடியும் என்று பாமக இளைஞர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் இன்று நடைபெற்ற பாமக இளைஞரணியின் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், இளைஞர்களாகிய உங்களை நம்பி தான் நம் கட்சி இருக்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். நம் கட்சிக்குள் உள்ள குழப்பங்கள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். யாரால் நடக்கிறது என்றும் உங்களுக்கு தெரியும். இதற்கு முக்கிய காரணம் திமுக தான்.
கட்சியும் சின்னமும் நமக்கே சொந்தம். ஆனால் ராமதாஸிடம் பொய் சொல்கின்றனர். ராமதாஸை சுற்றி உள்ளவர்கள் அவரிடம் பொய்யாகக்கூறி மனதை மாற்றுகின்றனர். ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். அதில் முக்கியமானவர் ஜி.கே. மணி தான். திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறக்கூடாது. அதனால் தான் நான்கு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் நடத்தினேன். அப்போது நான் திமுக செய்த ஊழல்களைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொன்னேன். திமுக பணத்தை மட்டுமே நம்பி உள்ளது. அங்கு உழைக்க ஆளில்லை. இளைஞர்கள் நினைத்தால் 2 மாதத்தில் எந்த புரட்சியும் செய்ய முடியும். ஆனால் பாமகவிற்கு இளைஞர்களுடைய நம்பிக்கை உள்ளது. இங்கு என் தம்பி தங்கைகளின் உழைப்பு உள்ளது.
உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கட்சிக்காக நீங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டுள்ளீர்கள். நீங்கள் நினைத்தால் 2 மாதத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எந்த புரட்சியும் உங்களால் செய்ய முடியும். எத்தனையோ நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு ஏராளமான புரட்சிகள் நடந்துள்ளது. அது யாரால் என்றால் உங்களைப் போன்ற இளைஞர்களால் தான். தமிழகத்தில் மாற்றம் என்பது பாமக-வால் மட்டுமே சாத்தியம். வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் சக்தி ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றத்திற்கான விதையாக ராயப்பேட்டை கூட்டம் அமைந்துள்ளது என அவர் நம்பிக்கையுடன் பேசினார்.