மலக்குழி மரணங்கள்.. தொழில்நுட்ப யுகத்திலும் தொடரும் அவலம் - இதுக்கு என்ட் கார்டே இல்லையா!

Su.tha Arivalagan
Nov 25, 2026,10:45 AM IST

- சு.தா.அறிவழகன்


விண்வெளியில் ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), அதிவேகத் தொடர்பு என மனிதகுலம் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் நவீன காலத்திலும், மனிதக் கழிவு மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மனித உயிர்கள் பறிபோவது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. 


நாட்டின் மிகப் பெரிய ஐடி ஹப் என புகழப்படும் ஹைதராபாத்தில், பாசுபள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி எச்சுமன் (24), சுரேஷ் (25), பவன் (25) ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்த செய்தி, நம் சமூகத்தின் மனசாட்சியை மீண்டும் ஒருமுறை உலுக்கியுள்ளது. 24 மற்றும் 25 வயது நிரம்பிய இளம் உயிர்கள், எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி நச்சு வாயுக்களுக்கு இரையாகிப் போயிருப்பது கடும் கண்டனத்திற்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியது.


கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் நேரடியாக இறங்கிச் சுத்தம் செய்வதைத் தடுக்கும் சட்டங்களும், உச்ச நீதிமன்றத்தின் கடுமையான வழிகாட்டுதல்களும் நடைமுறையில் இருந்தாலும், அவை முழுமையாகவும் கறாராகவும் பின்பற்றப்படுகின்றனவா என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.


அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளைக் குறைந்த செலவில் முடிப்பதற்காகத் தனியார் ஒப்பந்ததாரர்களை நாடுகின்றன. அங்கு போதிய பாதுகாப்புக் கவசங்கள் (PPE kits), சுவாசக் கருவிகள் மற்றும் நச்சு வாயு கண்டறியும் கருவிகள் வழங்கப்படுவதில்லை.





வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான சூழலை அறிந்திருந்தும் கூடப் பிழைப்பிற்காக இளைஞர்களும் தொழிலாளர்களும் இத்தகைய பணிகளில் தள்ளப்படுகின்றனர். விபத்து நிகழ்ந்தவுடன் வழக்குப் பதிவு செய்வதும், சிறிய அளவிலான இழப்பீடு அறிவிப்பதும் மட்டுமே தொடர்கதையாகி வருகின்றன.


இந்தக் கொடூரமான மரணங்களை முற்றிலுமாகத் தடுக்க வெறும் அனுதாப வார்த்தைகளோ, தற்காலிக நிவாரணங்களோ போதாது; அடிப்படை மாற்றங்களும் கடுமையான நடவடிக்கைகளும் அவசியம்.


கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கு ரோபோக்கள் மற்றும் நவீன இயந்திரங்களின் பயன்பாட்டைக் கட்டாயமாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும் தனியார் குடியிருப்பு நலச் சங்கங்களும் இயந்திர முறைகளை மட்டுமே பயன்படுத்தத் தவறினால், உரிமம் ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களில், பணியை ஒப்படைத்த குடியிருப்பு நிர்வாகம் அல்லது நிறுவனம், ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு ( culpable homicide ) உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தவிர்க்க முடியாத சூழல்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும், சர்வதேசத் தரத்திலான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இத்துறையில் பணியாற்றுவோருக்கு விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் குடும்பப் பாதுகாப்புத் திட்டங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


"நம் வீட்டுக் கழிவு எங்கே செல்கிறது, அதை யார் சுத்தம் செய்கிறார்கள்?" என்ற கேள்வியை ஒவ்வொரு குடிமகனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். மலிவான சேவையை எதிர்பார்க்காமல், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிமுறைகளை மட்டுமே பின்பற்றுவது ஒவ்வொரு குடியிருப்பின் சமூகக் கடமையாகும்.


தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். "சக மனிதனின் உயிரைப் பணயம் வைத்து உருவாகும் எந்தத் தூய்மையும் உண்மையான தூய்மையல்ல."


ஹைதராபாத்தில் மட்டுமல்ல, இதுபோன்ற சம்பவங்கள் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுமே தொடர் கதையாக உள்ளன. இனியும் ஒரு உயிர்கூட இதுபோலப் பறிபோகக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை அரசும், மக்களும் இணைந்து அமல்படுத்த முன்வர வேண்டும்.