Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
- சு.தா.அறிவழகன்
மழைக்காலம் வந்தாலே போதும்... தமிழகத்துல, குறிப்பா நம்ம சென்னைப் பெருநகரத்துல ஸ்கூல் பசங்களுக்கும், அவங்க பெற்றோர்களுக்கும் விடியறதே ஒரு 'சஸ்பென்ஸ் த்ரில்லர்' போலதான் ஆரம்பிக்கும்!
காலையில கண்ணைத் திறந்ததும் முதல் வேலையா ஜன்னலை உத்துப் பாக்குறது... "மழை கொட்டுதே... கலெக்டர் லீவு விடுவாரா இல்லையா?"ங்கிற இந்த ஒற்றைக் கேள்விதான், அன்னைக்கு அவங்க நாளோட ஒட்டுமொத்த சூப்பர் ஹிட் பஞ்சாயத்து!
வானிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களில் சில நேரம் ஒரு சொட்டு மழை கூடப் பெய்வதில்லை. மாறாக, விடுமுறை அளிக்கப்படாத இயல்பான நாட்களில் எதிர்பாராத விதமாகக் கனமழை பெய்து, பள்ளிகளுக்குச் சென்றுவிட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் வீடு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். பெற்றோர்களும் தவிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
வானிலையின் இந்தத் தொடர் 'கண்ணாமூச்சி' விளையாட்டால், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். ஒவ்வொரு மழைக்காலத்திலும் விடுமுறையா இல்லையா என்ற குழப்பமும், பாடங்கள் நடத்துவதில் ஏற்படும் தேக்கமும் தொடர்கதையாகி வருகின்றன.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண நம் கல்வி முறையில் காலகட்டத்திற்கு ஏற்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், மழைப் பொழிவால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 'இணையவழி வகுப்புகளுக்கு' அதாவது - Online Classes - தற்காலிகமாக மாறலாம்.
கொரோனா பேரிடர் காலத்தில் இணையவழி வகுப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட தற்போதைய சூழலுக்கு ஏற்ற மிகச்சிறந்த மாற்று முறை இதுவேயாகும். மழைக்காலங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்றோ அல்லது சூழ்நிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வீடுகளில் இருந்தபடியோ இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்களைச் சீராக நடத்த முடியும். பாடமும் நடக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லை. ஆசிரியர்களும் சிரமப்படத் தேவையில்லை.
மழைக்காலத்தின்போது, மழையே இல்லாவிட்டாலும் கூட முதல் நாள் பெய்த மழையால் சாலைகளில், தெருக்களில் செல்வதும் சிரமம்தான். யூனிபார்மில் சேறு அடித்து விடும் பிரச்சினை உள்ளது. மழைக்காலத்தில் பரவும் நோய்களும் மாணவர்களை சிரமப்படுத்தும். பலருக்கு வீஸிங் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மழையில் நனைந்து வீடு செல்வதும், பள்ளிக்கு வருவதும் கடும் சிரமத்தையே தரும். இதற்கும் கூட இந்த ஆன்லைன் வகுப்புகள் முற்றுப்புள்ளி வைக்கும்.
"காலத்திற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்" என்ற வார்த்தைக்கு ஏற்ப, மழைக்கால விடுமுறைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த இணையவழி கற்றல் முறையைக் கொள்கை முடிவாக ஏற்று அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்!
*விடுமுறை என்ற பெயரில் மாணவர்கள் படிப்பில் இருந்து முழுமையாக விலகிவிடுவதும், பிறகு அந்தப் பாடங்களைச் சேர்த்துப் படிப்பதும் அவர்களுக்குக் கூடுதல் சுமையாகிறது. இந்த இணையவழி முறை அதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும்.
மாணவர்கள் மழையின் ரம்மியமான சூழலை ரசிக்கவும் வேண்டும்; அதே நேரத்தில் அவர்களின் எதிர்காலக் கல்வி எந்தவிதத் தடையுமின்றித் தொடரவும் வேண்டும். மழை நின்றாலும், வாழ்வின் கல்வி ஓட்டம் நின்றிடக் கூடாது. இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது கல்வித்துறையின் இந்த நவீன மாற்றம்தான், எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் அளிக்கும் சிறந்த பரிசாகவும் இருக்க முடியும்!
கன்சிடர் பண்ணுவாங்களா உரியவர்கள்??