தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!
- சு.தா.அறிவழகன்
தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களும், சட்டம்-ஒழுங்குச் சீர்கேடுகளும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. நாளுக்கு நாள் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள், மற்றும் சிறார்கள் கடத்தல் போன்ற செய்திகள், சமூகப் பாதுகாப்பின் நிலையை உற்றுநோக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்மைக் கொண்டுவந்து சேர்த்துள்ளன.
குறிப்பாக, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2026 மாத இடைவெளியில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் 11, 2026 அன்று மர்மமான முறையில் மாயமானார். இந்த வழக்கு தற்போது தீவிர விசாரணைக்காக சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டு, தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறது. இன்னும் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் உள்ளது.
ராணிப்பேட்டையில் நடைபாதையில் பெற்றோர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை, 35 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு ஆந்திர பிரதேசத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளிலும் சிறுமிகள் கடத்தப்படுவது மற்றும் மாயமாவது தொடர்பான புகார்கள் பதிவாகி வருகின்றன.
சிறார்கள் கடத்தலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைக் கடத்தி, பிற மாநிலங்களிலோ அல்லது மாவட்டங்களிலோ குழந்தை இல்லாதவர்களுக்குப் பணத்திற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நெட்வொர்க் ஒரு பக்கம் உள்ளது.
கடத்தப்படும் சிறுமிகள் சில சமயங்களில் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதேபோல, குடும்பப் பகை அல்லது தனிப்பட்ட மோதல்கள் காரணமாகக் குழந்தைகளைக் கடத்துவதும் நடக்கிறது. அதாவது பெரியவர்களைப் பழிவாங்க குழந்தைகளைக் கடத்தும் செயல் இது.
இத்தகைய சம்பவங்களைத் தடுக்கப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள் காணாமல் போய் விட்டால் நாமளே தேடிப் பார்ப்போம் என்று இல்லாமல் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும். புகார் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான அவசரப் புகார்களுக்கு சைல்டுலைன் எண் 1098 அல்லது காவல்துறையின் 100 / 112 ஆகிய எண்களை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் குழந்தையின் ஆபத்தையே அதிகரிக்க உதவும்.
சிறார்கள் கடத்தல் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பிரத்யேகக் காவல் படைகளை அமைத்து, 24 மணி நேரமும் விரைந்து செயல்படும் அமைப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் சமூக அளவில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கொலை, கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவு நீதிமன்றங்கள் மூலம் குறுகிய காலத்தில் தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும். தண்டனையின் வேகம் மட்டுமே குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களும் சமூகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டாரம், இணையப் பயன்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்து நல்வழிப்படுத்துவது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
ஒரு மாநிலத்தின் அமைதியும் பாதுகாப்புமே அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு முதன்மைத் தூணாகும். மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பாதுகாப்பாகத் திரும்பும் சூழலை உறுதி செய்வது அரசின் முதன்மைக் கடமை. எனவே, தமிழக அரசு மற்றும் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு இக்குற்றச் சம்பவங்களை அடக்கி, சட்டம்-ஒழுங்கை முழுமையாக மீட்டெடுத்துப் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க உடனடியாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதே காலத்தின் அவசியமாகும்!