தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!

Su.tha Arivalagan
Oct 23, 2026,11:57 AM IST

- சு.தா.அறிவழகன்


இன்றைய காலகட்டத்தில் சாதாரண எளிய குடும்பங்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார சவால் விலைவாசி உயர்வு. பணவீக்கம் அதிகரிக்கும்போது இந்த விலைவாசி உயர்வு ஏற்படுகிறது.  


அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் வரை அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் அண்மைக் காலத்தில் அதிகரித்து, மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் சேமிப்பையும் பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தி வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசுகளும் என்னென்னவோ செய்துதான் பார்க்கின்றன.


தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. பருவமழை பொய்த்துப் போவதாலோ அல்லது எதிர்பாராத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகவோ வேளாண் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.  இதனால் வெங்காயம், தக்காளி, பருப்பு வகைகள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது.


தமிழ்நாட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அண்டை மாநிலங்களில் நிலவும் உற்பத்திப் பற்றாக்குறையால் வரத்து குறையும் போது, இங்குள்ள சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.




பெட்ரோல், டீசல் விலை உயர்வு சரக்கு போக்குவரத்துக் கட்டணத்தை நேரடியாக உயர்த்துகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குப் பொருட்களை எடுத்து வரும் செலவு அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் சந்தை விலை உயர்கிறது. அதாவது உற்பத்தி ஆகும் இடத்தில் விலை குறைவாக இருக்கும். ஆனால் சந்தைக்கு அது வந்து சேரும்போது கூடவே விலைவாசியும் ஏறிப் போய் விடுகிறது.


நகரமயமாக்கல் காரணமாகக் குடியிருப்பு வாடகைகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் பிற பராமரிப்பு சேவைகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது பணவீக்கத்தை மேலும் தூண்டுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் விலைவாசியும் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது.


விலைவாசி உயர்வு சமூகத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களையும் பாதித்தாலும், எளிய மற்றும் நடுத்தர மக்களின் மீதே அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மாதாந்திர வருமானத்தில் பெரும் பகுதி உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கே செலவழிக்கப்படுவதால், சேமிக்கும் திறன் முற்றிலும் குறைகிறது.


காய்கறிகள், பால், பருப்பு போன்ற சத்துள்ள உணவுகளின் விலை உயர்வால், குறைந்த வருவாய் பிரிவினர் தரமான உணவை வாங்குவதைக் குறைத்துக் கொள்ளும் சூழல் உருவாகிறது.  டீ, காபி போன்ற சாதாரண பானங்களைக் கூட கட் செய்யும் நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்படுகிறார்கள்.


அன்றாடச் செலவுகள் மற்றும் அவசர மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க மக்கள் தனியார் கடன்களையோ அல்லது கடன் அட்டைகளையோ (Credit Cards) சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது மேலும் மேலும் அவர்களது நிதிச் சுமையை அதிகரிக்கவே செய்யும்.


தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறை விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை சந்தையில் அதிகரிக்கும் போது, பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.


விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறிகள் மற்றும் தானியங்கள் வீணாகாமல் இருக்க, தாலுகா அளவில் அதிக குளிர்பதனக் கிடங்குகளை (Cold Storage) அமைக்க வேண்டும். இது காய்கறிகள், தானியங்கள் பாழாவைத் தடுத்து அதிகம் பேருக்கு கிடைக்க வகை செய்யும்.


உழவர் சந்தை போன்ற அமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் சரியான விலை கிடைக்கும், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். நகர்ப்புறங்களில் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் உழவர் சந்தையை விரிவுபடுத்த வேண்டும்.


செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்தும் நபர்கள் மீது உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தேவைப்பட்டால் குண்டர் தடைச் சட்டம் போன்ற கடுமையான பிரிவுகளையும் கூட தயங்காமல் பயன்படுத்தலாம்.


பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற விவசாயிகளுக்குச் சிறப்பு மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவில் விவசாயத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காவிரி நீரை மட்டும் நம்பியிராமல் மாற்று வழிகளையும் யோசித்து அமலாக்கி தஞ்சை விவசாயத்திற்குப் புத்துணர்ச்சி தந்தால் அரிசிக்காக நாம் வெளி மாநிலங்களை நம்பியிருக்கும் நிலையை மாற்றலாம்.


விலைவாசி உயர்வு என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அங்கமாக இருந்தாலும், அது மக்களின் வாங்கும் திறனை மீறிச் செல்லும்போது பெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியைச் சீரமைப்பது, சந்தை விலையைக் கண்காணிப்பது மற்றும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலமே தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும்.


முந்தைய தலையங்கங்கள்