தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
- சு.தா.அறிவழகன்
வாழ்க்கை என்பது நாம் திட்டமிட்டபடி மட்டுமே பயணிப்பதில்லை; சில நேரங்களில் ஒரு வினாடி கவனக்குறைவு, ஒட்டுமொத்த வாழ்க்கையின் திசையையே மாற்றிப்போட்டு விடுகிறது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நவீன உலகில், 'விபத்து' என்பதும் 'காயம்' என்பதும் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற நிதர்சனத்தை நாம் பல நேரங்களில் மறந்தே வாழ்கிறோம்.
இந்த ஆபத்தை உணர்த்தி, உயிர்களின் மதிப்பைப் போற்றவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ஆம் தேதி 'உலக காயங்கள் தினம்' (World Trauma Day) அனுசரிக்கப்படுகிறது.
சாலை விபத்துகள், எதிர்பாராத தீக்காயங்கள், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் அசம்பாவிதங்கள், வீடுகளில் நிகழும் தவறுகள் என காயங்கள் பல வழிகளில் நம்மைத் தாக்குகின்றன.
"எனக்கு ஒன்றும் ஆகாது" என்ற வீண் நம்பிக்கைதான் பல குடும்பங்களின் ஒளிவிளக்கை அணைத்துவிடுகிறது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், செல்போனை ஒரு பக்க காதில் சொருகியபடி கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுவது ஆகியவை கணப்பொழுதில் பெரும் சோகத்தை விதைக்கின்றன.
சமையலறை தொடங்கி தொழில்சாலைகள் வரை சிறிய கவனச்சிதறலும் பெரும் உடற்காயங்களுக்கும் ஊனங்களுக்கும் வழிவகுத்து விடுகிறது. காயம் என்பது வெறும் உடலுக்கு ஏற்படும் வலி மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையும், மன அமைதியையும் சேர்த்தே காயப்படுத்துகிறது.
காயங்கள் ஏற்படும் போது மிகவும் முக்கியமான விஷயம் - 'கோல்டன் ஹவர்' எனப்படும் முதல் ஒரு மணி நேரம் தான். விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் காயம்பட்டவருக்கு அளிக்கப்படும் சரியான முதலுதவியும், மருத்துவ சிகிச்சையும் அவரது உயிரைத் தப்ப வைப்பதோடு, நிரந்தர ஊனம் ஏற்படுவதையும் 80% வரை தடுக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், பல நேரங்களில் விபத்து நடக்கும் இடத்தில் இருக்கும் மக்கள், முதலுதவி செய்யத் தெரியாமலோ அல்லது தேவையில்லாத பயத்தினாலோ வேடிக்கை பார்ப்பதும், கையில் இருக்கும் செல்போனில் படம் பிடிப்பதும், நாம காப்பாற்ற முயற்சித்தால் நாளை கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டுமே என்ற தேவையில்லாத பயமும்தான் காயம்பட்ட பலரது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது என்பது வேதனையான உண்மை.
விபத்தில் சிக்கியவரைப் படம் பிடிப்பதை விட, உடனடியாக ஆம்புலன்ஸை அழைப்பதும், முறையான முதலுதவி அளிப்பதும் தான் ஒரு மனிதனை வாழ வைக்கும்.
ஒரு தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகப் பதறாமல் என்ன செய்ய வேண்டும்? சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அதை எப்படித் தடுப்பது? மூச்சுத்திணறல் ஏற்பட்டால் 'சி.பி.ஆர்' (CPR) பயிற்சி எப்படி அளிப்பது? என்ற அடிப்படை முதலுதவிப் பயிற்சிகளை ஒவ்வொரு குடிமகனும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் முதலுதவிப் பயிற்சிகளைப் கட்டாயமாக்குவது, அவசரகாலங்களில் உயிர்களைக் காக்கும் மிகப்பெரிய ஆயுதமாக மாறும்.
இன்றைய 'உலக காயங்கள் தினத்தில்' நாம் அனைவரும் சில எளிய உறுமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மட் அணிவோம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் கண்டிப்பாக போடுவோம். பைக் அல்லது கார் போன்ற வாகனங்களை ஓட்டும்போது செல்போனை அறவே தவிர்ப்போம்.
அடிப்படை முதலுதவி முறைகளைக் கற்றுக்கொண்டு, ஆபத்தான சூழலில் தயங்காமல் உதவிக்கரம் நீட்டுவோம். ஆம்புலன்ஸ் (108) மற்றும் அவசர உதவி எண்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்போம் என்பதுதான் அந்த உறுதிமொழிகள்.
"வருமுன் காப்பதே அறிவு" என்பார்கள். காயங்கள் மற்றும் விபத்துகள் என்பவை தவிர்க்க முடியாத இயற்கைச் சீற்றங்கள் அல்ல; பெரும்பாலான காயங்கள் நமது கவனத்தினாலும், எச்சரிக்கை உணர்வினாலும் தவிர்க்கப்படக் கூடியவையே! ஒரு வினாடி நிதானம் ஒரு முழு வாழ்க்கையைக் காப்பாற்றும். உலக காயங்கள் தினமான இன்று முதல், சாலைகளிலும், வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிப்போம்.
விழிப்புணர்வோடு செயல்பட்டு, மனித உயிர்களைக் காப்போம்!