தென்தமிழ் தலையங்கம்: மன அழுத்தத்தை வெல்வோம் - மனநலமே மனித பலம்!
- சு.தா.அறிவழகன்
நவீன யுகத்தின் அதிவேக வாழ்க்கை முறை மனிதனைப் பல சாதனைகளை நோக்கி அழைத்துச் சென்றிருக்கும் அதேவேளையில் அவனது மன அமைதியைப் பறித்து, பலவித கண்ணுக்குத் தெரியாத அழுத்தங்களுக்கும் ஆளாக்கியுள்ளது.
நாள்தோறும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், இலக்குகளைத் துரத்தும் அவசரம், மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை இணைந்து மன அழுத்தத்தை (Stress) நமது அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றிவிட்டன. இந்த நிலையில், மன அழுத்தத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும், அதன் தாக்கத்தைக் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படும் சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு தினம் நமக்கு ஒரு மிக முக்கியமான நினைவூட்டலாக அமைகிறது.
இப்போது யாரைக் கேட்டாலும், வயது வித்தியாசமே இல்லாமல், எனக்கு ஒரே ஸ்டிரஸ்ஸாக இருக்கிறது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. உண்மையில் எல்லோருமே ஏதாவது ஒரு ஸ்டிரஸ்ஸில்தான் இருக்கிறோம். அதை மறுக்க முடியாது. நம்முடைய வாழ்க்கை முறை அப்படி ஆகி விட்டது. எல்லாவற்றுக்காகவும் ஓட வேண்டியுள்ளது. அந்த அழுத்தத்தை நாம் சுமந்தபடிதான் வாழ வேண்டியுள்ளது. எனவே இந்த ஸ்டிரஸ்ஸைத் தவிர்க்க முடியாது. மாறாக, அதை சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் என்பது ஒரு நபரின் உடல் மற்றும் மனநலனை மெல்ல அரித்துத் தின்னும் நச்சு போன்றது. ஆரம்பக் கட்டத்தில் சாதாரண சோர்வாகத் தெரியும் இது, நாளடைவில் தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் தீவிர மனச்சோர்வு (Depression) போன்ற ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுத்து விடுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது சமூகத்தில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது இன்றும் ஒரு கூச்சமாகவே பார்க்கப்படுகிறது. "எனக்கு மன அழுத்தம் இருக்கிறது" என்று வெளிப்படையாகச் சொல்வதை பலரும் பலவீனமாகக் கருதுகின்றனர். இந்தத் தயக்கமே பல விலைமதிப்பற்ற உயிர்களை அமைதியான முறையில் காவு வாங்குகிறது.
இந்த நிலையை மாற்ற வேண்டிய தருணம் இது. உடல் நலத்திற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் மன நலத்திற்கும் வழங்கப்பட வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாகத் தவிர்ப்பது கடினமாக இருக்கலாம்; ஆனால், அதை சரியான முறையில் கையாள்வது (Stress Management) நம் கைகளில்தான் உள்ளது. போதுமான தூக்கம், சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தியானம், யோகா மற்றும் இயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவது ஆகியவை மன அழுத்தத்தை எதிர்கொள்ள எளிய வழிமுறைகளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் மனச்சுமைகளைச் சக மனிதர்களிடமோ அல்லது மனநல நிபுணர்களிடமோ பகிர்ந்துகொள்வது பாதிப்பைப் பாதியாகக் குறைத்துவிடும்.
மன அழுத்தம் என்பது தனிமனிதனின் பிரச்சினையல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை. பணிபுரியும் இடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது அவசியமானது. அலுவலகங்களில் ஊழியர்களின் மனநலத்திற்குக் குரல் கொடுக்கும் கலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும். சக ஊழியர்களிடையே கருத்துப் பரிமாற்றம், மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதற்கான ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும். ஊழியர்கள் தனித் தனித் தீவுகளாக இல்லாமல் சகஜமாக பேசக் கூடிய பணிச் சூழல் இருக்க வேண்டும். மேலதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் தோழமையுடன் பேச வேண்டும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை அவ்வப்போது கேட்டு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மன அழுத்தமற்ற, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். மன நலக் குழப்பங்களுடன் யாரேனும் இருந்தால் யோசிக்காமல் அவர்களுடன் பேசுங்கள், அவர்களது குறையை, பிரச்சினையைத் தீர்க்க முயற்சியுங்கள், அவர்களுக்கு உதவுங்கள். அது நம்முடைய தனிப்பட்ட கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் கடமையும் ஆகும்.