தென்தமிழ் தலையங்கம்: போலிகளை விரட்டியடித்து.. நூலகப் பெருமை மீட்டெடுக்கப்பட வேண்டும்!

Su.tha Arivalagan
Nov 09, 2026,10:33 AM IST

- சு.தா.அறிவழகன்


ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் அமைந்திருந்த நூலகங்கள், தலைமுறைகளை உருவாக்கிய அறிவுக் கூடங்களாகத் திகழ்ந்தன. நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதை ஓர் உயரிய தவமாகக் கருதினர் நமது இளைஞர்கள். சிந்தனைச் சிற்பிகளையும், அறிஞர்களையும் உருவாக்கிய அந்தப் பெருமைமிகு நூலகத்துறையின் தற்போதைய நிலை பெரும் கவலையளிப்பதாக உள்ளது.


சமீபத்தில் கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி புத்தகங்கள் குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெரும்பாலான பொது நூலகங்களில் படிப்பதற்குத் தகுதியற்ற, தரமற்ற புத்தகங்கள் மலிந்து கிடப்பதாகக் கூக்குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்திலும்கூட தரமற்ற நூல்கள் குவிந்து கிடப்பதாக வரும் தகவல்களும் அதிர்ச்சி தருகின்றன.


நூலகங்களில் வைக்கப்படும் பல புத்தகங்களை வாசகர்கள் எவரும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. 'சமூகத்திற்குப் பயன்படும் வகையிலோ, வாசகர்களின் அறிவை விசாலமாக்கும் நோக்கத்திலோ புத்தகங்கள் எழுதப்படுவதை விட, எப்படியாவது நூலகக் கொள்முதலில் தள்ளிவிட்டு லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பல நூல்கள் உருவாக்கப்படுகின்றன' என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.




உயர்மட்டப் பரிந்துரைகள் மற்றும் செல்வாக்குகளின் அடிப்படையில் தகுதியற்ற புத்தகங்கள் நூலகங்களில் இறக்குமதி செய்யப்படுவதால், உண்மையான, தரமான எழுத்தாளர்களின் படைப்புகள் நூலகங்களை எட்டிப்பிடிக்க முடியாமல் வாசல்களிலேயே தங்கிவிடுகின்றன. சமூகத்திற்குத் தேவையான நல்ல நூல்கள் கிடைக்காமல் போகும்போது, பொதுமக்களுக்கும் நூலகங்களுக்குமான இடைவெளி மேலும் அதிகமாகிறது.


இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டு, எந்தவித ஆழமான சிந்தனையோ அல்லது உழைப்போ இன்றி அச்சடிக்கப்படும் நூல்களும் நூலகங்களுக்குள் ஊடுருவத் தொடங்கியிருப்பது அறிவியக்கத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். இத்தகைய ஏஐ மூலமாக எழுதப்பட்ட நூல்களுக்கு நூலகங்களில் முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டும்.


நூலகங்கள் நமது அறிவை விசாலமாக்க உதவும் ஆலயம். அந்த இடத்தில் இப்படிப்பட்ட களங்கங்கள் குடியேறியிருப்பது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இப்போதைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதாக நாம் ஏற்கனவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில், இதுபோன்ற தரமற்ற, தகுதியற்ற நூல்கள் நூலகங்களில் மலிந்து விட்டால் படிக்க வருபவர்களும் கூட அறிவு மழுங்கிப் போகும் அபாயமே அதிகரிக்கும்.


தமிழ்நாட்டின் நூலகத் துறையை முழுமையாகச் சீரமைக்க இதுவே சரியான தருணம். அரசு உடனடியாகத் தலையிட்டு, நூலகப் புத்தகக் கொள்முதல் நடைமுறைகளை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றியமைக்க வேண்டும். சிறந்த வல்லுநர்கள், நடுநிலையான எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களைக் கொண்ட குழுவின் மூலமே புத்தகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். போலி மற்றும் தரமற்ற நூல்களை முற்றிலுமாக அகற்றி, உண்மையான தகுதியும் ஆழமும் கொண்ட நூல்கள் மட்டுமே நமது நூலகங்களை அலங்கரிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அப்பொழுதுதான், தமிழ்நாட்டின் அறிவுச் சுடர் மீண்டும் பிரகாசமாக எரியும்.