தென்தமிழ் தலையங்கம்: சொல்லாத வலிகளும், தாங்கிக்கொள்ளும் தோள்களும்!
- சு.தா.அறிவழகன்
கன்னிராசி என்ற படத்தில் கவுண்டமணி சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது புகைப்படத்தைப் பார்த்து உன்னையெல்லாம் இந்த வீட்டில் யார் மதிக்கிறாங்க. நான் மதிக்கிறேன் என்று மாலை போட்டு விடுவார். ஒவ்வொரு ஆண்கள் தினத்தன்றும் இந்த காமெடி காட்சிதான் சமூக வலைதளங்களில் வலம் வரும். But Jokes apart, ஆண்களும் நிஜமாகவே கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான்!
உலகம் கொண்டாடும் பல தினங்களுக்கு மத்தியில், ஆண்களுக்கான தினம் பெரும்பாலும் சத்தமில்லாமல் கடந்து போவதுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் அச்சாணியாகவும், சமூகத்தின் பல தூண்களில் ஒன்றாகவும் நிற்கும் ஆணின் உழைப்பும், அவனது உணர்வுகளும் அலசி ஆராயப்பட வேண்டியவை.
“ஆண் என்றால் கல்லா?.. இல்லை.. கல்லுக்குள் ஈரம் போல அவனுக்கும் காயங்கள் இருக்கும், கண்ணீர் இருக்கும்” என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதில்தான் ஆண்கள் தினத்தின் உண்மையான அர்த்தம் ஒளிந்திருக்கிறது.
சிறு வயதிலிருந்தே ஒரு ஆணின் மனதில் விதைக்கப்படும் முதல் எதிர்பார்ப்பு, “நீதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்பதாகும். அதாவது சிறு வயதிலேயே அவனது பொறுப்பை சுட்டிக் காட்டி அந்த சுமையை தோளில் ஏற்றி விடுகிறார்கள். பிறகென்ன, படிப்பு, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் முதுமைக் காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது பொறுப்புகள் கூடிக்கொண்டே செல்கின்றன.
பொருளாதார நெருக்கடிகள் வரும்போது, தன்னைச் சார்ந்தவர்களின் முகத்தில் வாட்டம் தெரியாமல் இருக்க அவன் படும் பாடு சொல்லில் அடங்காதது. சொந்த ஆசைகளையும், கனவுகளையும் பல நேரங்களில் குடும்பத்தின் தேவைகளுக்காக விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது.
"ஆண்கள் அழக்கூடாது” என்ற சமூகத்தின் எழுதப்படாத விதி, ஆண்களின் உணர்வுகளைப் பெரும்பாலும் உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துவிடுகிறது. பெண்களும் அழக் கூடாது என்ற புதிய விதியை இன்றைய சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
அலுவலக அழுத்தங்கள், நிராகரிப்புகள், தோல்விகள், மனச்சோர்வு என எத்தனை புயல்கள் வீசினாலும், வெளியே சிரித்த முகத்துடன் நின்று சமாளிக்கும் ஆற்றல் பல ஆண்களிடம் காணப்படுகிறது. புலம்புவதைக் காட்டிலும், தீர்வுகளைத் தேடுவதிலும், அமைதியாகச் சவால்களை எதிர்கொள்வதிலும் அவர்கள் காட்டும் நிதானம் வியப்பளிக்கக்கூடியது. ஆனால், இந்த அமைதியின் பின்னால் இருக்கும் மன அழுத்தத்தையும், தனிமையையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.
ஆணாதிக்கம் என்ற கொடுமையான அடையாளத்திலிருந்து இன்றைய ஆண்கள் நிறையவே வெளி வந்து விட்டார்கள். ஒவ்வொரு ஆணும் ஒரே மாதிரியானவர் அல்ல; எனினும், பொதுவாக ஆண்களிடம் வெளிப்படும் சில குணங்கள் சமூகத்தைச் சமநிலைப்படுத்துகின்றன:
ஒவ்வொரு நாளும் தனது குடும்பத்துக்காக ஓடிக் கொண்டிருக்கும், உழைத்துக் கொண்டிருக்கும், கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான். ஆண்கள் தினம் என்பது வெறும் வாழ்த்துச் செய்திகளோடு முடிந்துவிடுவதல்ல. ஆண்களும் மனிதர்கள்தான்; அவர்களுக்கும் களைப்பு இருக்கும், ஆதரவு தேவைப்படும், மனம் விட்டுப் பேச ஒரு தோள் தேவைப்படும் என்பதைச் சமூகம் உணர வேண்டிய நாள் இது.
கண்ணீரை மறைக்கும் கவசங்களைக் களைந்து, மனதைப் பகிர்ந்துகொள்ளும் நட்பையும் அன்பையும் ஆண்களுக்கு வழங்குவோம். அப்போதுதான், அவர்கள் சுமக்கும் பாரம் குறையும்; அவர்களின் புன்னகையில் உண்மையான நிம்மதி பிறக்கும்.
வாழ்த்துகள் ஆண்களே!