தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
இன்று, இந்தியத் திருநாட்டின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள். ஆண்டுதோறும் அக்.2 வந்துவிட்டால் போதும்; அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, அவர் வகுத்துத் தந்த 'அகிம்சை', 'வாய்மை' (சத்தியம்) போன்ற உயரிய கோட்பாடுகளைப் பற்றி மேடைகளில் முழங்குவது வழக்கமாகிவிட்டது. ஆனால், சடங்காக மாறிப்போன இந்த வாழ்த்துகளுக்குப் பின்னால், காந்தி கனவு கண்ட இந்தியா உண்மையிலேயே வாழ்கிறதா? என்ற கேள்வி ஒவ்வொரு பிரஜையின் மனதிலும் எழாமல் இல்லை.
காந்தியடிகள் வலியுறுத்திய நேர்மையும், அமைதியும் இன்றைய சமுதாயத்திலும், அரசியல் தளத்திலும் எங்கே தேடினாலும் கிடைக்காத அரிதான பொருட்களாக மாறிவிட்டன. “அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை” என்ற காந்தியின் இலக்கணம் தலைகீழாக மாற்றப்பட்டு, அதிகாரத்தையும் சுயநலத்தையும் கைப்பற்றுவதற்கான ஒரு வழிகாட்டல் முறையாக இன்றைக்கு உருவெடுத்துள்ளது. கொள்கை சார்ந்த அரசியலுக்குப் பதிலாக, சாதி, மதப் பிரிவினைகளையும் வெறுப்புப் பேச்சுகளையும் மூலதனமாகக் கொண்டு தற்காலிக ஆதாயம் தேடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காந்தியைக் கொண்டாட வேண்டியவர்கள், காந்திப் படம் பொறித்த ரூபாய் நோட்டுகளுக்குப் பின்னால்தான் ஓடிக் கொண்டுள்ளனர். அவர்களிடம் சிக்கி தேசத் தந்தை படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்றைய சமூகச் சீர்கேடுகளுக்கு மிக முக்கியக் காரணியாக உருவெடுத்திருப்பது 'மதுக் கொடுமை'. “மதுவே இந்தியாவின் மிகப்பெரிய சாபம்; அது மக்களின் உடலையும் ஆன்மாவையும் அழிக்கிறது” என்று காந்தி கதறினார். மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தபடி இருந்தார். ஆனால் சுதந்திர இந்தியாவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைக்கு அரசாங்கங்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகவே மது விற்பனை மாறிவிட்டது வேதனையின் உச்சம்.
போன வருடம் இவ்வளவு விற்றோம்.. இந்த வருடம் இதை விட அதிகமாக விற்போம் என்று டார்கெட் வைத்து மக்களைச் சூறையாடி வருகின்றன அரசாங்கங்கள். மதுவால் சீரழியும் குடும்பங்கள், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் என சமுதாயக் கட்டமைப்பு சீர்குலைந்து கிடக்கிறது.
மற்றொருபுறம், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் 'வன்முறை கலாச்சாரம்'. சிறு விவாதங்கள் கூட கொலை, வெட்டுக் குத்துகளில் முடியும் அளவுக்கு மக்களின் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்புணர்வு, வன்முறையை நியாயப்படுத்தும் போக்குகள் என சமுதாயம் எங்கே பயணிக்கிறது என்ற அச்சம் உருவாகிறது. ஆயுதத்தை ஏந்தாமல், அகிம்சை வழியில் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசின் அதிகாரத்தை உலுக்கிய காந்தியின் மண்ணில், இன்று வன்முறை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தட்டிக்கொண்டிருக்கிறது.
காந்தி என்பது வெறுமனே நாணயத்தில் அச்சடிக்கப்பட்ட படம் அல்ல; அது வாழ்வியல் நெறி!
காந்தியார் மறைந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என பெயர் சூட்டுங்கள் என்றார் தந்தை பெரியார்.. ஆனால் இன்று காந்தி தேசமாகவா இந்தியா உள்ளது என்று கேட்டால்.. இல்லை என்றுதான் வேதனையுடன் சொல்ல வேண்டியுள்ளது.
மகாத்மாவை, வெறும் வரலாற்று நாயகனாக நினைவுகூர்ந்து மாலை மரியாதையோடு நிறுத்திவிடாமல், அவர் காட்டிய நல்வழிகளைச் சிறிதளவாவது நமது அன்றாட வாழ்விலும், சமூகப் பொதுவெளியிலும் நடைமுறைப்படுத்தத் தொடங்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அரசியலில் நேர்மை, சமுதாயத்தில் மது ஒழிப்பு, மனிதர்களிடையே பரஸ்பர அன்பு மற்றும் வன்முறையற்ற போக்கு ஆகியவற்றை மீட்டெடுப்பதே காலத்தின் கட்டாயம்.