தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

Su.tha Arivalagan
Oct 08, 2026,10:11 AM IST

- சு.தா. அறிவழகன்


பிரான்ஸ் போன்ற வளம் மிக்க, தொழில்வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாட்டிலேயே சுமார் 10 லட்சம் மக்களுக்கான குடிநீர் விநியோகம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தொட்டிகளிலும் (Tankers) பாட்டில்களிலும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


எப்போதும் பனியாலும், மிதமான மழையாலும் சூழப்பட்டிருக்கும் ஐரோப்பாவிற்கே இந்த நிலைமை என்றால், இது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் இயற்கை விடுக்கும் கடுமையான எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை!


பிரான்சில் நிலவும் வறட்சியின் நிஜ முகம் நம்மை அதிர வைக்கிறது.. பிரான்சில் வறட்சியா என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம்.. ஆனால் வறட்சி என்ற வார்த்தை உலகம் முழுவதும் இப்போது இல்பானதொரு வார்த்தையாக மாறத் தொடங்கியுள்ளது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.


பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்ப அலைகளும், போதிய மழையின்மையும் அந்நாட்டின் நீர் ஆதாரங்களை வெகுவாகப் பாதித்துள்ளன.




பிரான்சின் மிக நீளமான லோயர் (Loire) நதி மற்றும் கரோன் (Garonne) போன்ற பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்ப் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


வறட்சியின் காரணமாகப் பயிர்கள் காய்ந்துபோய், பல பில்லியன் யூரோ அளவிலான விவசாய இழப்புகளைச் சந்திக்க நேரிட்டுள்ளது. நதிநீர் வற்றியதால், அணுமின் நிலையங்களின் குளிர்விப்பு அமைப்புகளும், நீர்மின் திட்டங்களும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.


அட பிரான்சில் தானே வறட்சி, நாம மயிலாப்பூர்லதானே இருக்கோம்.. இங்கெல்லாம் தண்ணிக்குப் பஞ்சமே இல்லை தெரியுமா என்று நாம் அசட்டையாக இருந்து விட முடியாது. புவி வெப்பமயமாதலும் (Global Warming), பருவநிலை மாற்றமும் (Climate Change) எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு பிரான்ஸ் ஒரு சான்று.


இயற்கையின் சமநிலையை நாம் தொடர்ந்து குலைத்து வந்தால், நாளை ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா என உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதே போன்ற அல்லது இதைவிடக் கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவனின் வாக்கு வெறும் தத்துவமல்ல, அது நாம் எதிர்கொள்ளப் போகும் கசப்பான உண்மை.


இயற்கை இவ்வளவு கொடூரமாக மாறுவதற்கு மனிதர்களாகிய நாமதாங்க முக்கியக் காரணம். வேறு யாருமே கிடையாது. மழை இப்படி பொய்த்து விட்டதே என்று இயற்கையை திட்டுவதில் நியாயமே இல்லை.


நகரமயமாக்கல் மற்றும் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் காடுகளையும் மரங்களையும் அழித்து, பூமிக்கு மழை தரும் இயற்கையின் கரங்களை வெட்டி எறிகிறோம். நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவற்றை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவதால் வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்பநிலையை உயர்த்துகிறது.


ஏரிகள், குளங்கள், ஆறுகளை கழிவுநீர் கொட்டும் இடங்களாகவும், கட்டடங்கள் கட்டும் நிலங்களாகவும் மாற்றிவிட்டோம். நிலத்தடி நீரைச் சீரான முறையில் நிர்வகிக்காமல், அளவுக்கு அதிகமாக உறிஞ்சி ஆழ்துளைக் கிணறுகளை வறண்டு போகச் செய்கிறோம்.


கட்டுப்பாடற்ற பிளாஸ்டிக் பயன்பாடும் ரசாயனக்கழிவுகளும் நிலத்தையும்  நீரையும் நச்சுத்தன்மையாக்குகின்றன. பருவநிலை மாற்றம் என்ற அச்சுறுத்தலை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு, நமது அன்றாட வாழ்க்கையிலும் அரசுகளின் கொள்கைகளிலும் அதை தீவிரமாகக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பது. கழிவுகளும் நிலத்தையும்  நீரையும் நச்சுத்தன்மையாக்குகின்றன. 


இப்படி இருந்தால் பிறகு பூமி எப்படி வளமாக இருக்கும்.. ஈரமாக இருக்கும்? பிரான்சில் எழுந்திருக்கும் குடிநீர் தட்டுப்பாடு என்பது வெறும் ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. அது பூமிப் பந்து முழுவதும் பரவக் காத்திருக்கும் பேராயுதத்தின் முன்அறிவிப்பு.


இயற்கையைச் சுரண்டுவதையும் மாசுபடுத்துவதையும் நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். மரம் வளர்த்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மறுசுழற்சி ஆற்றல்களைப் பயன்படுத்துதல் போன்ற மாற்றங்களை இப்போதே தொடங்கவில்லையெனில், அடுத்த தலைமுறைக்குக் குடிப்பதற்கு ஒரு சொட்டு நீரைக் கூட விட்டுச் செல்ல முடியாத அவலம் உருவாகிவிடும்!


எதிர்காலப் போர்கள் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.. வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவலை எடுத்துப் படியுங்கள்.. விபரீதம் இன்னும் வேகமாகப் புரியும்.