தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!
- சு.தா.அறிவழகன்
ஜெம் வீரமணி நிகழ்த்தியதாக கூறப்படும் அக்கிரமச் செயல்களும், அதற்குப் பின்னணியில் வெளிவந்துள்ள திடுக்கிடும் உண்மைகளும் தமிழகத்தின் மனசாட்சியை ஒட்டுமொத்தமாக உலுக்கி வருகின்றன. குறிப்பாக பெண் பிள்ளைகளை வைத்துள்ளவர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போடுவதாக உள்ளன இந்த கொடூரத்தின் பின்னணித் தகவல்கள்.
இப்படி நடப்பது முதல் முறையல்ல.. சமூகத்தில் பெரிய மனிதர்களாகவும், தொழிலதிபர்களாகவும் வலம் வரும் அயோக்கியர்களின் உண்மையான முகம் வெளிப்படும்போதெல்லாம், இந்த சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற பேரதிர்ச்சி உண்டாகிறது. பண பலமும், அதிகார பலமும் இருந்தால் எந்த எல்லைக்கும் செல்லலாம், பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டுச் சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாகத் தப்பித்துவிடலாம் என்ற இறுமாப்பே இதுபோன்ற அரக்கர்களின் கொடூர நடவடிக்கைகளுக்குக் காரணமாக அமைகிறது.
இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெண்களே இதற்கெல்லாம் தரகர்களாகவும், உறுதுணையாகவும் இருந்து பிஞ்சுக் குழந்தைகளை வேட்டையாட உதவிகரமாகச் செயல்பட்டிருப்பதுதான். பெற்ற தாய்மார்களாக, சகோதரிகளாக இருக்க வேண்டிய பெண்களுக்குள் இப்படியொரு கொடூரமான பண ஆசை புகுந்து, பிஞ்சுகளின் வாழ்வை நாசம் செய்யத் தூண்டியுள்ளது என்பது அறநெறியின் உச்சகட்ட வீழ்ச்சியையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட கீழ்த்தரமான அயோக்கியர்கள் சமூகத்தில் 'கௌரவமான முகமூடி' அணிந்துகொண்டு உலாவுவது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். பெரிய தொழிலதிபர்கள், செல்வாக்குமிக்கவர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, தங்களின் காம வெறிக்கும் பண ஆசைக்கும் அப்பாவிச் சிறுமைகளைப் பலியாக்கும் இந்த மனித மிருகங்களுக்கு எந்தவொரு இரக்கமும் காட்டப்படக் கூடாது.
இவர்களுக்குத் துணையாகச் செயல்பட்ட பெண்களுக்கு முதன்மைக் குற்றவாளிக்கு இணையான தண்டனையைச் சட்டம் உடனடியாக வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைச் சாதாரணக் கைதிகளைப் போல நடத்தாமல், பிணையில் வர முடியாத கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விரைவு நீதிமன்றங்கள் மூலம் சில வாரங்களுக்குள் விசாரணையை முடித்து, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வரை வழங்கிச் சிறையிலடைக்க வேண்டும். சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்ற பயம் உருவாகும்போதுதான் இதுபோன்ற அயோக்கியர்களின் கொட்டம் அடங்கும்.
இந்த அக்கிரமங்களைத் தடுக்கவும், நமது குழந்தைகளைப் பாதுகாக்கவும் சமூக அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வும் கண்காணிப்பும் அவசியமாகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் தினசரி உரையாடி, அவர்களின் நடத்தையில் ஏற்படும் சிறு மாற்றங்களையும், அவர்கள் சந்திக்கும் நபர்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். மேலும், செல்வாக்குமிக்கவர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளில் எவ்வித அரசியல் அல்லது பண பல தலையீடும் இல்லாமல், நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளிலும், சமூகத்திலும் அநாமதேயப் புகார் அமைப்புகளைப் பலப்படுத்தி, குழந்தைகள் அல்லது பெற்றோர் பயமின்றிப் புகாரளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
அதை விட முக்கியமாக இது போன்ற விவகாரங்கள் எழும்போது, இந்த அக்கிரமங்களுக்குத் துணை நிற்போர், யாராக இருந்தாலும் சரி மிக மிகக் கடுமையான முறையில் அவர்களைத் தண்டிக்க சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். இனி ஒரு பிஞ்சின் மீது கை வைக்க எவனும் துணியக் கூட பயப்பட வேண்டும். அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அரசியல் பாரபட்சம் இல்லாமல் அனைவரும் அதற்கு துணை நிற்க வேண்டும்.
நமது குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்புமாகும். யோக்கியர்கள் என்ற முகமூடியுடன் சுற்றித்திரியும் இந்த அயோக்கியர்களின் கொட்டத்தை ஒடுக்கி, பிஞ்சுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!