தென்தமிழ் தலையங்கம்: மந்திரக் கரண்டியும் மல்டி-டாஸ்கிங்கும் - ஹேப்பி இல்லத்தரசிகள் டே!

Su.tha Arivalagan
Nov 03, 2026,10:41 AM IST

-சு.தா.அறிவழகன்


காலைல அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எழுந்து, கரண்டியையும் காபியையும் கையில் ஏந்தும் நம் வீடுகளின் 'சூப்பர் ஹீரோஸ்' யாரென்று கேட்டால், அது நம் இல்லத்தரசிகள் தான்! 


அன்பின் உருவமாகவும், சோர்வறியா உழைப்பின் வடிவமாகவும் திகழும் இல்லத்தரசிகளைச் சிறப்பிக்கும் விதமாக, உலகெங்கும் 'தேசிய இல்லத்தரசிகள் தினம்' நவம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. 


காலைல டிபன் என்னன்னு யோசிக்கிறதுல ஆரம்பிச்சு, நள்ளிரவு தூங்கப் போற வரைக்கும் அவங்களோட பிரைன் செம ஸ்பீடா ஓடிக்கிட்டே இருக்கும். அவங்க ஓடாவிட்டாலும் கூட குடும்பத்தின் சூழல் அவர்களை ஓய்வெடுக்க விடாமல் ஓட விட்டுக் கொண்டே இருக்கும்.


இல்லத்தரசிகளிடம் இருக்கும் ஸ்பெஷல் ஸ்கில்ஸ் வேறு யாருக்குமே இருக்காதுங்க.


Google Map-ஐ மிஞ்சும் அளவுக்கு லொகேஷன் சென்ஸ் அவங்களுக்கு மட்டுமே உண்டு. வீட்டில் எது எது எங்க இருக்கும்னு அவங்களுக்கு மட்டும்தான் துல்லியமா தெரியும். ஏதாவது மாறிப் போயிருந்தா.. சுள்ளுன்னு வந்து விழும் பாருங்க.. அதுக்குப் பயந்து கொண்டே குடும்பத்து ஆத்மாக்கள் எப்போதும் உஷாரா இருப்பாங்க.. அதையும் தாண்டி, "பேசிக்கலி நாங்க சோம்பேறிஸ்" என்று சொல்பவர்களையும் சேர்த்து சமாளிக்கும் திறமை இல்லத்தரசிகளுக்கு உண்டு.




கனிவு காட்டுவதில் அவர்களுக்கு நிகர் இல்லை. சில நேரங்களில் கண் பேசும்.. சில நேரங்களில் கரண்டி பேசும்! 


எந்தப் பொருளும் வீணாகாமல், இருக்கிறதை வச்சு சூப்பரா ஒரு ராஜபோஜனம் ரெடி பண்றதுல நோபல் பரிசுக்கே தகுதியானவங்க. Multi-tasking மகாராணிகள் இவர்கள் மட்டுமே. ஒரு கையில போன்ல பேசிட்டே, இன்னொரு கையில கரண்டியால குழம்பைக் கிண்டி, அந்தப் பக்கம் கணவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்துக் கொண்டு, பிள்ளைகளையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, கண்ணாலேயே உத்தரவிட்டு அதைச் செய் இதைச் செய் என்று சொல்லியபடி சமாளிக்கும் மேஜிக் இவங்ககிட்ட மட்டும்தான் சாத்தியம்!


எல்லாருக்கும் என்ன வேணும்னு கரெக்டா தந்துகிட்டே இருப்பாங்க. ஆனா, யாருமே அவங்களுக்கு உட்கார வச்சு ஒரு வாய் காபி போட்டுத் தரணும்னு யோசிக்கிறதே இல்லை.. எல்லோரும் இல்லை. ஆனால் பெரும்பாலான ஆண்கள் அல்லது குடும்பத்தார் அப்படித்தான்.


எந்தவித ஊதியமும், விடுப்பு நாட்களும், ஓய்வு நேரமும் எதிர்பாராமல், குடும்பத்தின் ஒட்டுமொத்த அச்சாணியாகச் சுற்றிச் சுழன்று செயல்படும் இல்லத்தரசிகளின் தியாகத்தைப் போற்றவும், அவர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கவும் மிகச் சிறந்த தருணம் இது.


சமூகத்தில் பல துறைகளில் சாதனைப் புரியும் மனிதர்களை நாம் தினமும் கொண்டாடுகிறோம். ஆனால், விடியற்காலையில் தொடங்கி நள்ளிரவு வரை ஓயாமல் உழைத்து, தன் குடும்பத்தை ஒரு குடையின் கீழ் நல்வழிப்படுத்தும் இல்லத்தரசியின் பணி பல நேரங்களில் வெளிச்சத்திற்கே வருவதில்லை. சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், கணவனின் துணையாக, குழந்தைகளின் முதல் குருவாக, குடும்பத்தின் நிதி நிர்வாகியாக, மற்றும் குடும்பப் பந்தத்தின் மையப்புள்ளியாக அவர்கள் ஆற்றும் பங்கு விலைமதிப்பற்றது.


"ஒரு ஆண் படித்தால் அவன் மட்டும் கல்வி பெறுகிறான்; ஒரு பெண் படித்தால் அவளின் ஒட்டுமொத்த குடும்பமும் சமுதாயமும் கல்வி பெறுகிறது" என்ற முதுமொழிக்கு ஏற்ப, குடும்பத்தை நிர்வகிக்கும் இல்லத்தரசிகளின் மனவலிமை எல்லையற்றது. பல பெண்கள் தங்களின் சொந்தக் கனவுகளையும், லட்சியங்களையும் குடும்பத்திற்காகத் தியாகம் செய்துவிட்டு, குடும்பத்தினரின் முகங்களில் புன்னகையை வரவழைப்பதையே தங்கள் முழுநேரக் கடமையாகக் கொண்டுள்ளனர்.


இல்லத்தரசிகளின் உழைப்புக்கு எந்தப் பொருளையும் ஈடாகச் சொல்ல முடியாது. பணம் கொடுக்க முடியாத உழைப்பு அது; அன்பால் மட்டுமே அளவிடக்கூடியது. இந்தச் சிறப்பு நாளில், நமது வீடுகளின் ஒளியாகத் திகழும் அத்தனை இல்லத்தரசிகளுக்கும் நமது அன்பையும், நன்றியையும், மரியாதையையும் சமர்ப்பிப்போம்.


அதற்காக இந்த ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்வதோடு நின்றுவிடாமல், அவர்களின் அன்றாடப் பணிகளைப் பகிர்ந்து கொள்வதும், அவர்களின் சுயமரியாதையையும் மனமகிழ்ச்சியையும் மதிப்பதும் நாம் அவர்களுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும்.


வாரத்தில் ஒரு நாளாவது நம்ம வீட்டின் இந்த ஒரிஜினல் பாஸ்களுக்கு ஃபுல் லீவு கொடுப்போம். அன்னிக்கு குடும்பமே சேர்ந்து சமையல் பொறுப்பை கையில் எடுப்போம். அன்று முழுவதும் வீட்டின் தேவைகளை அனைவருமாக சேர்ந்து நிர்வகிப்போம். வீட்டை சுத்தம் செய்வது, வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருவது என எல்லா வேலைகளையும் நாமே செய்வோம்.. அந்த ஒரு நாளாவது இல்லத்தரசிகள் ஓய்வெடுக்கட்டும். சமையல் சொதப்புனா கூட பரவாயில்லை, அவங்களோட அந்த நிம்மதியான சிரிப்பு இருக்குதே... அதுதான் அந்த நாளின் பெஸ்ட் அவுட்புட்! 


குடும்பம் என்ற ஆலமரத்தின் கண்ணுக்குத் தெரியாத வேராக விளங்கும் இல்லத்தரசிகளின் வாழ்வு எப்போதும் வளமும் நலமும் பெற வாழ்த்துவோம்!


முந்தைய தலையங்கங்கள்