தென்தமிழ் தலையங்கம்: மழித்த முகம் மாறிய பார்வை - "தேசிய தாடியற்ற தினம்"

Su.tha Arivalagan
Oct 19, 2026,09:58 AM IST

- சு.தா.அறிவழகன்


இன்டர்நெட் யுகத்தில் விதவிதமான தினங்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகிவிட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களுக்கு அப்பால், சமூக வலைதளங்களின் வழியே முளைத்தெழுந்து உலகளாவிய கவனத்தைப் பெறும் விநோத மற்றும் சுவாரசியமான தினங்களில் ஒன்றுதான் 'தேசிய தாடியற்ற தினம்'.


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 18 அன்று அனுசரிக்கப்படும் இந்நாள், வெறும் முகச்சவரத்தைத் தாண்டி நமக்குள் எழும் ஒரு சிறிய மாற்றத்தின் உளவியல் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் தொடங்கிய இந்த வித்தியாசமான தினம் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கென்று இருக்கும் வெகு சில கொண்டாட்டங்களில் இதுவும் தற்போது இடம் பிடித்துக் கொண்டுள்ளது.


முதன்முதலில் அமெரிக்காவில் ஒரு சிறிய இணைய டிரெண்ட் போலத்தான் இந்தக் கொண்டாட்டம் தொடங்கியது. ஆனால், எல்லைகளைக் கடந்த சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், இன்று ஐரோப்பிய நாடுகள் முதல் இந்தியா வரை உள்ள இளைஞர்கள் இதனை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.


'கிளீன் ஷேவ்' தோற்றத்திற்கு மாறுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களை (Before & After) பகிர்ந்து, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தங்களின் மாற்றங்களை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தும் நவீன கலாச்சார வெளிப்பாடாக இது உருவெடுத்துள்ளது.


கேரளாவுக்குப் போனால் பெரும்பாலானோரும் தாடியுடன்தான் இருப்பார்கள். அங்கு தாடி என்பது கிட்டத்தட்ட ஒரு அடையாளம் போல மாறியிருக்கிறது. தாடி வைக்காத மலையாளிகளைப் பார்ப்பது அரிது என்று சொல்லும் அளவுக்கு மலையாள மக்கள் தாடிப் பிரியர்களாக உள்ளனர்.


தாடி என்பது பரிதாபத் தோற்றத்தைத் தரும் என்றும் சிலர் சொல்லக் கூடும்.. அதேசமயம், அதை வளர்க்கும் வகையில் வளர்த்தால், வைக்கும் அளவில் வைத்தால் அறிவுஜீவித் தோற்றத்தையும் அது கொடுக்கும். அதேசமயம், தமிழ்நாடு போன்ற பெரும்பாலும் வெப்பப் பிரதேசத்தில் தாடி என்பது எரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்கும் என்பதால் நம்மவர்கள் மீசையோடு நின்று கொள்கிறார்கள்.





தற்காலத்தில் அடர்த்தியான தாடி வளர்ப்பது ஃபேஷனாக மாறிவிட்ட போதிலும், மாதக்கணக்கில் முகத்தை மறைத்து நிற்கும் தாடியை ஒரே நாளில் அகற்றிவிட்டு இயல்பான தோற்றத்திற்கு மாறுவது ஒருவித அலாதியான சுகம்தான்.. கிட்டத்தட்ட தில்லுமுல்லு படத்தில் மீசையை வழிக்கும்போது ரஜினி வருத்தப்படுவாரே அதுபோலத்தான்.


கண்ணாடியில் பல நாட்களுக்குப் பிறகு தனது சொந்த முகத்தின் இளமையான பொலிவையும், மாற்றப்பட்ட தோற்றத்தையும் பார்ப்பது நபர்களுக்கு ஒரு மனநிறைவைத் தரும். வழக்கமான பிஸியான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, தோற்றத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான உளவியல் உந்துதலாக இந்நாள் அமைகிறது.


அடிக்கடி தாடிக்குக் கீழே இருக்கும் சருமம் காற்றுப் புகாமல் சோர்வடைவது இயற்கையே. அக்டோபர் 18-ன் வருகை, அந்தச் சருமத்திற்குத் தேவையான இடைவெளியைக் கொடுத்து, இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகப் பேண ஒரு நல்ல வாய்ப்பையும் வழங்குகிறது.


இது என்ன பிரமாதம்.. இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கே.. அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் தாடி வளர்க்கும் மாதமாக அதாவது 'நோ-ஷேவ் நவம்பர்' (No-Shave November)" என்ற கொண்டாட்டம் வருகிறது. இதை 'மோவெம்பர்' (Movember) என்றும் சொல்கிறார்கள். புற்றுநோய் விழிப்புணர்விற்காக இந்த கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கவுள்ளனர்.


தாடி வைத்திருப்பதும், அதை நீக்குவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பமும் பாணியும்தான். ஆனால், முகத்தில் இருக்கும் தேவையற்ற பாரங்களை அகற்றுவது போல, வாழ்க்கையின் வழக்கமான சுழற்சியில் ஒரு சிறிய புத்துணர்வைக் கொண்டுவருவதே இதுபோன்ற தினங்களின் உள்ளார்ந்த நோக்கமாகும். மாற்றங்கள் எப்போதும் புத்துணர்வைத் தருபவை - தந்தால்தான் அவை மாற்றமாகவே கருதப்படும். அந்த வகையில், இந்தத் தாடியற்ற தினம் நமக்குத் தருவதும் ஒரு உற்சமான புத்துணர்ச்சியே!


என்னங்க நீங்களும் கிளம்பிட்டீங்களா.. ஷேவ் பண்ண?


முந்தைய தலையங்கங்கள்