Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
- சு.தா.அறிவழகன்
"எப்பப் பார்த்தாலும் ஒரே ஸ்டிரஸ்ஸா இருக்கு.. பிரஷ்ஷரா இருக்கு.. என்னால சமாளிக்கவே முடியலை".. இந்த வார்த்தைகளை இப்போது நாம் சாதாரணமாக அனைவரிடத்திலும் கேட்கிறோம்.
மன ரீதியாகவே எல்லோரும் பலவீனமாகி வருகிறோம் என்பதன் அறிகுறிதான் இதெல்லாம். நமக்கு முந்தைய தலைமுறையினர் தலைக்கு மேல் இடியே விழுந்தாலும் சிரித்தபடி இருப்பார்கள். எதையும் எளிதாக சமாளிப்பார்கள். கையில் காசே இல்லாவிட்டாலும் கூட கெத்தாக இருப்பார்கள். மன அழுத்தம், ஸ்டிரஸ் என்ற வார்த்தைகள் எல்லாம் அவர்கள் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது.
ஆனால், நம் காலத்தின் மிக அமைதியான, ஆனால் வலி மிகுந்த தொற்றுநோய்களில் ஒன்றாக மாறி நிற்கிறது மன அழுத்தம். உடல் நலம் குன்றினால் ஊரே கூடி மருத்துவம் பார்க்கும் சமூகம், மனநலம் பாதித்தால் அதை ஏதோ தனிப்பட்ட பலவீனமாகவோ அல்லது மறைக்க வேண்டிய ரகசியமாகவோ பார்க்கிறது.
இதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் நாள் உலக மனநல நாள் (World Mental Health Day) அறிமுகப்படுத்தப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. மனநலத்தைப் பற்றிய உரையாடல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இது ஊக்குவிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவுக்கு மன வலிமைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை இத்தினம் உரக்கச் சொல்கிறது.
இன்றைய நவீன உலகில், இயந்திரத்தனமான வாழ்க்கை முறை, பொருளாதாரச் சுமை, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் என எல்லாமே மனிதனின் நிம்மதியைத் தினந்தோறும் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. அலுவலகத்தில் டார்கெட் டார்கெட் என்று துரத்தும் அவசரம், குடும்பத்தில் எதிர்பார்ப்புகளைச் பூர்த்தி செய்யும் அழுத்தம் இவையெல்லாம் சேர்ந்து நம் மனதை ஒரு கண்ணாடியைப் போல உடையச் செய்கின்றன.
ஆனால், வெளியில் சிரித்துக் கொண்டே திரியும் பலரின் உள்ளே பெரும் புயல் வீசிக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அவருக்கென்னப்பா ஜாலியா சிரிச்சுட்டு அவர் பாட்டுக்கு இருக்காரு, கவலையத்த மனிதர் என்று சாதாரணமாக கடந்து போய் விடுகிறோம்.. ஆனால் அந்த நபருக்குள் இருக்கும் உளைச்சலை யாரும் அறிவதில்லை. மன உளைச்சலை வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்படிப் பேசுவது பலவீனமல்ல, அது குணமடைவதற்கான முதல் படி என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
மனநலத்தைப் பேணிக்காப்பது என்பது ஏதோ பெரிய தத்துவமல்ல, நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறிய மாற்றங்களே போதுமானவை. நமக்கென்று சில மணித்துளிகளை ஒதுக்கிக் கொள்வது, நம்மைப் புரிந்து கொள்ளும் மனிதர்களிடம் பேசுவது, சமூக ஊடகங்களின் நச்சுத் தன்மையிலிருந்து சற்று விலகி இருப்பது போன்ற எளிய விஷயங்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.
எப்போதெல்லாம் நம் மனம் பாரமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பரிடமோ அல்லது தகுதியான மனநல மருத்துவரிடமோ பேசுவதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது. உடல் வலியைப் போலவே மனவலியும் மருத்துவ ரீதியாகக் குணப்படுத்தக்கூடியதே.
மனதை இலகுவாக வைத்திருக்க சில எளிய வழிகள்
உங்கள் உணர்வுகளைக் மனதிற்குள்ளேயே பூட்டி வைக்காமல், நம்பிக்கையான நபரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பேசுவது மனச் சுமையை பாதியாகக் குறைக்கும்.
தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நடைபயிற்சி, யோகா அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Pranayama) செய்வது மனதை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டும்.
சமூக வலைதளங்களில் எழும் தேவையற்ற ஒப்பீடுகளும், எதிர்மறையான செய்திகளும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொலைபேசியைத் தள்ளி வையுங்கள்.
இரவில் சரியான தூக்கம் இல்லாதது மூளையின் செயல் திறனைக் குறைத்து, மன உளைச்சலை அதிகரிக்கும். தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.
மன அழுத்தம் எல்லை மீறும் போது, ஒரு மனநல ஆலோசகரை (Counselor or Therapist) அணுகுவது சாதாரண சளிக்கு மருத்துவரைப் பார்ப்பதைப் போன்றதுதான்; இதில் எவ்விதத் தயக்கமும் தேவையில்லை.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்... என்கிறது திருக்குறள்
உடல்நலம் போல மனநலமும் மனிதனின் அடிப்படை உரிமை. சக மனிதர்களின் வலியைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தோள் கொடுக்கும் ஒரு இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதே உலக மனநல நாளின் உண்மையான நோக்கமாகும். மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்!