தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
- சு.தா. அறிவழகன்
தேர்தல் ஆணையம் என்பது நமது ஜனநாயக அமைப்பின் மிக முக்கியத் தூண்களில் ஒன்றாகும். நியாயமான, சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதே நாட்டின் ஜனநாயகக் அடித்தளத்தைப் பலப்படுத்தும். ஆனால், சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மற்றும் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களும், சந்தேகங்களும் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும், கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்களது ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளும், அதற்குத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கங்களும் தேர்தல் ஆணையத்தின் உட்கட்டமைப்பில் உள்ள வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மேலும், ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளும், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு எழுந்த பெரும் சவாலாகும்.
மக்களாட்சியின் உயிர்நாடியே தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையில்தான் உள்ளது. "நீதி வழங்கப்படுவது மட்டும் போதாது; அது வழங்கப்படுவது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்" என்ற சட்டப் பழமொழி தேர்தல் ஆணையத்திற்கும் முழுமையாகப் பொருந்தும். தேர்தல் ஆணையம் விமர்சனங்களைக் கடந்து, தனது நடுநிலைமையைச் செயலில் நிரூபித்து, உலகளாவிய ஜனநாயகத்தின் நம்பிக்கைக்குரிய அடையாளமாகத் திகழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகள் கூறுவதை தேர்தல் ஆணையம் முற்றிலும் நிராகரிக்காமல் மிகப் பொறுமையாகவும், நிதானமாகவும், அதை வெளிப்படையாகவும் விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு சவால் விடுவது போல தேர்தல் ஆணையம் பலமுறை விளக்கம் அளித்ததும் தற்போது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
குறிப்பாக "சார்" நடவடிக்கை குறித்துதான் பலருக்கும் பெருத்த சந்தேகங்கள் குழப்பங்கள் இன்றளவும் உள்ளன. இந்த நடவடிக்கையில் இன்று வரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியபடியே உள்ளன. ஆனால் விடைகள்தான் திருப்திகரமாக வரவில்லை. இதைக் களைய தேர்தல் ஆணையம் வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தேர்தல் ஆணையம் தனது இழந்த நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும், மக்களின் நம்பிக்கையைப் பெறவும் நிறைய சீர்திருத்தங்களை, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அ. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும். அவை வெளிப்படையாக இருக்க வேண்டும்.
ஆ. முக்கிய முடிவுகளில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் (Dissent notes) ஏற்படும் பட்சத்தில், ஜனநாயக முறைப்படி அந்த மாற்றுக்கருத்துகளையும் பொதுவெளியில் அல்லது அதிகாரப்பூர்வ பதிவுகளில் வெளிப்படையாகப் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இது தெரியப்படுத்தப்பட வேண்டும். இது தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும்.
இ. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனம் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய நடுநிலையான தேர்வுக் குழு (Selection Committee) மூலம் வெளிப்படையாக நடைபெற வேண்டும். தற்போதைய நடைமுறைப்படி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுதான் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என்ற நிலை உள்ளது. இதில் நடுநிலை இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
ஈ. தேர்தல் ஆணையர்களுக்குப் பணிக்குப் பிந்தைய அரச பதவிகளோ, ஆளுநர் பதவிகளோ அளிக்கப்படாது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதை சட்டமாக்கவும் கூட செய்யலாம். அப்போதுதான் அவர்கள் எந்தவித அரசியல் அழுத்தமுமின்றிச் செயல்பட முடியும்.
உ. தற்போதைய சட்டப்படி தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் சிறப்புத் தீர்மானம் தேவை. ஆனால், மற்ற தேர்தல் ஆணையர்களை தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நீக்க முடியும். எனவே, அனைத்து ஆணையர்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான பதவி நீக்கப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.
ஊ. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் (Model Code of Conduct) விஷயத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி ஒரே மாதிரியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதை அமல்படுத்த நடுநிலையான குழுக்களை தேர்தல் ஆணையம் அமைக்கலாம்.
எ. தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளும், அதுதொடர்பான விளக்கங்களும் பொதுமக்களுக்கு தெளிவாகவும் உடனுக்குடனும் அறிவிக்கப்பட வேண்டும். இதில் வெளிப்படையான செயல்பாடுகள் மிக மிக முக்கியம்.
ஏ. தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரும் போதும் அல்லது அது சார்ந்த நடவடிக்கைகளை அமல்படுத்தும் போதும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் முன்-கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஆன்லைன் மூலமாக பொதுவாக்கெடுப்பு கூட நடத்தலாம். அது நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும். ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படும் முடிவுகள் சந்தேகத்தை வலுப்படுத்துமே தவிர, தீர்வைத் தராது.
ஐ. தேர்தல் ஆணையத்தின் நிதி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் அரசின் தலையீடின்றி முழுமையான தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
ஒ. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI) எவ்வித அரசியல் செல்வாக்குமின்றி, சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம். அதற்கான முக்கிய யோசனைகள்:
ஓ. வாக்குப்பதிவு, வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சந்தேகங்களுக்குத் தேர்தல் ஆணையம் உடனுக்குடன், வெளிப்படையாகப் பதிலளிக்கும் செய்தித் தொடர்பு அமைப்பை உருவாக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக எழுப்பும் சந்தேகங்கள் குறைகளுக்கும் உடனடியாக தீர்வை அறிவிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம்.
ஜனநாயக அமைப்பில் எல்லாமே வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி இருப்பதுதான் அந்த அமைப்பை வலுப்படுத்த உதவும். "சார்" நடவடிக்கைகள் தொடர்பாக இன்னும் கூட விடை தெரியப்படாத பல குழப்பங்கள் உள்ளன. அதுவே தேர்தல் ஆணையத்திற்குப் பின்னடைவுதான். அதையெல்லாம் சரி செய்தால் தேர்தல் ஆணையம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும். அமெரிக்கா போன்ற உலக நாடுகளே கூட நமது தேர்தல் முறையைப் பார்த்து வியந்து நிற்கின்றன. இப்படி, உலக நாடுகளுக்கு தேர்தல் நடத்துவதில் மிகப் பெரிய முன்னோடியாக நமது தேர்தல் ஆணையம் விளங்குகிறது. அந்தப் புகழையும், பெருமையையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரின் கடமையும் ஆகும். ஜனநாயகத் தூண் சாய்ந்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்குமே உண்டு.