தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
- சு.தா.அறிவழகன்
சிங்கப்பூரில் குறைந்துவரும் பிறப்பு விகிதமும், அதைச் சமாளிக்க அரசே ‘டேட்டிங் ஆப்’ அறிமுகப்படுத்தும் அளவுக்கு நிலைமை கைமீறிப்போயிருப்பதும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
உலகின் மிக நவீன, பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூரில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதைக் குறிக்கும் 'கருவுறுதல் விகிதம்' (TFR) 0.87 என்ற ஆபத்தான அளவுக்குக் கீழே சரிந்துவிட்டது. அதாவது, நாட்டின் மக்கள்தொகை குறையாமல் நிலையாக இருக்க வேண்டுமென்றாலே இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியைக் கூட சிங்கப்பூர் எட்டவில்லை.
நிலைமை இந்த அளவுக்கு மோசமானதற்குக் காரணங்கள் என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இது இளைஞர்களின் தனிப்பட்ட விருப்பம் போலத் தோன்றும். ஆனால், இதன் பின்னணியில் பல வாழ்வியல் அழுத்தங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுதான் கவலை கொள்ள வைத்துள்ளது. இங்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் நிறைய பாடங்கள் உள்ளன.
முதலாவதாக, தலைசுற்ற வைக்கும் வாழ்க்கைச் செலவு. வீடு வாங்குவது முதல் குழந்தையைப் பள்ளியில் சேர்த்து வளர்ப்பது வரை எல்லாமே அங்கே பெரும் பணத்தைச் சாப்பிடும் விஷயங்கள். இரண்டாவதாக, கடுமையான பணி கலாச்சாரம். காலை முதல் இரவு வரை வேலை, போட்டி, இலக்குகள் என ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்குச் சொந்த வாழ்க்கை என்ற ஒன்றைப் பற்றி யோசிக்கவோ, ஒருவரோடு பேசி பழகவோ நேரமே கிடைப்பதில்லை.
மூன்றாவதாக, மன ரீதியிலான மாற்றங்கள். திருமணம், குடும்பம் என்று கமிட் ஆகி கஷ்டப்பட பலரும் விரும்பவில்லை. மாறாக, தனிநபர் சுதந்திரம், நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம், சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என இன்றைய தலைமுறை நினைக்கத் தொடங்கியிருக்கிறது. இதுதான் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
GenZ தலைமுறைக்கே உரிய மனப்போக்கும், செயல்பாடுகளும், சமூக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அனைவரும் கவலை கொண்டுள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க சிங்கப்பூர் அரசு ஒரு முயற்சியை எடுத்துள்ளது. அதாவது, 'FirstDate' டேட்டிங் ஆப் முயற்சி ஒரு சுவாரசியமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. தனியார் டேட்டிங் ஆப்புகளில் இருக்கும் போலி கணக்குகள், ஏமாற்றங்களைத் தவிர்க்க அரசின் 'Singpass' அடையாளத்தைச் சான்றாகப் பயன்படுத்துவது, மாதம் ஒரு நல்ல இணையை மட்டும் பரிந்துரைத்துத் தீவிரமான உறவை ஊக்குவிப்பது எனத் தொழில்நுட்ப ரீதியாக இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
ஆனால் இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே. அரசுத் துறையில் பணியாற்றி வரும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே நட்பை ஏற்படுத்த இது உதவுமாம். அதேசமயம், ஒரே துறையில் ஒரே இடத்தில் பணியாற்றுவோருக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட மாட்டாதாம். வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே ஜோடி சேர்க்கப்படுவார்களாம்.
எல்லாம் சரி, ஆனால் செயலிகளால் குடும்பங்களை உருவாக்க முடியுமா?
அரசால் ஒரு செயலி மூலம் இருவரைச் சந்திக்க வைக்க முடியும், காதலிக்கக்கூட வைக்க முடியும். ஆனால், அந்த ஜோடி பயமின்றி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்கான சூழலை இந்தச் செயலி உருவாக்கித் தருமா என்றால், நிச்சயம் இல்லை.
சிங்கப்பூர் அரசு கொடுக்கும் பண உதவிகளோ (Baby Bonus), மகப்பேறு விடுமுறைகளோ இளைஞர்களின் அச்சத்தைப் போக்கப் போதுமானதாக இல்லை. ஏனெனில், விஷயம் பணத்தை மட்டும் சார்ந்ததல்ல; நேரத்தையும் மன அமைதியையும் சார்ந்தது. கமிட் ஆவதையே இளைஞர்கள் விரும்பவில்லை என்று இருக்கும்போது குழந்தை பெற்றுக் கொள்ள அவர்கள் எப்படி முன்வருவார்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது.
வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை (Work-Life Balance) சமூகத்தில் உருவாக்காத வரை, வேலைப் பளுவைக் குறைத்து குடும்பத்தோடு செலவிட நேரம் தராத வரை, இளைஞர்கள் குழந்தைப் பேற்றை ஒரு சுமையாகப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் டேட்டிங் ஆப் என்பது ஒரு தற்காலிகத் தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். ஆனால், அதுவே முழுமையான தீர்வாகிவிட முடியாது. நாட்டின் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கத் தேவைப்படுவது ஸ்மார்ட்போன் செயலிகள் அல்ல; இளைஞர்கள் நிம்மதியாக வாழக்கூடிய, பயமில்லாமல் குடும்பம் நடத்தக்கூடிய வாழ்வியல் சூழலே.. அதை உருவாக்க முயல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிங்கப்பூர் மட்டுமல்ல நம்ம ஊரிலும் கூட இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த சுந்திரமான வாழ்க்கை என்ற கான்செப்ட் வந்து விட்டது. பலரும் திருமணத்தை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். திருமணம் செய்யாமலேயே ஹேப்பியாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்பவும் ஆரம்பித்து விட்டனர். நம்ம ஊரிலும் டேட்டிங் ஆப்பை அரசு கொண்டு வரும் சூழல் எழுவதற்குள் சமூகம் சுதாரித்துக் கொண்டால் நல்லது.