Thentamil Editorial: சாட்டையைச் சுற்றி அப்படி சுழற்றி விட்டா.. விளையாட்டுகளின் ராஜா.. பம்பரம்!

Su.tha Arivalagan
Oct 14, 2026,09:18 AM IST

- சு.தா.அறிவழகன்


"ராஜா.. நான் ராஜா".. என்று கெத்தாக பாடக் கூடிய தகுதி பெற்ற ஒரு கிராமிய விளையாட்டு எது என்றால்.. எல்லோருடை பார்வையும் போய் விழுவது பம்பரத்தின் மீதுதான்.. அந்த விளையாட்டு கிட்டத்தட்ட இன்று மறைந்து போய் விட்டது.. குறிப்பாக நகரங்களில்.


கால இயந்திரத்தில் பின்னோக்கிப் பயணித்து, 90-களில் வாழ்ந்த குழந்தைகளின் பொற்காலத்தை நினைவு கூர்ந்தால், அதில் முதலிடம் பிடிப்பது பம்பரம் (Top) விளையாட்டு தான். வெறுமனே டிடி மட்டுமே பார்த்து வந்த டிவிக்கள் இருந்த காலத்தில், நவீன ஸ்மார்ட் போன்கள் மற்றும் விடியோ கேம்களின் ஆதிக்கம் வராத காலத்தில், திறமையைச் சோதிக்கும் ஒரு மாபெரும் கிராமியக் கலையாகவும், விளையாட்டாகவும் பம்பரம் விளங்கியது. 


பம்பம் விளையாடுவது தனிக் கலை.. பம்பர விளையாட்டில் எல்லோருமே கில்லியாக முடியாது. அதை விளையாடும் லாவகம், பம்பரத்தில் சாட்டையைச் சுற்றி அப்படியே சுழற்றி விடும் ஸ்டைல், எதிராளிகளின் பம்பரத்தின் மீது ஆக்கர் வைக்கும் திறமை என சிலருக்கு மட்டுமே அது கை வந்த கலையாக இருந்து. பம்பரம் விளையாடி பெரும் சண்டைகள் மூண்ட சம்பவங்களும் ஒரு காலத்தில் இருந்தது. அந்த அளவுக்கு அந்தக் காலத்து சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பம்பரம் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த பொற்காலம் அது.



                                                                                              

பம்பரம் என்பது ஏதோ நேற்றோ இன்றோ உருவான விளையாட்டல்ல. உலகின் மிகத் தொன்மையான பொம்மைகளில் ஒன்றாக பம்பரம் கருதப்படுகிறது.


எகிப்து நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் மண்பானை ஓடுகளில் பம்பரம் போன்ற அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பம்பரம் இருந்தது இதன் மூலம் தெரிய வருகிறது.


 பண்டைய ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மரத்தாலான பம்பரங்களை விளையாடியதற்கான சான்றுகள் உள்ளன.


இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த கலை இது.


கொய்யா மரம், நாவல் மரம் அல்லது புளிய மரத்தால் செதுக்கப்பட்டு, கீழ்ப்பகுதியில் நீண்ட இரும்பு ஆணி அடிக்கப்பட்ட பம்பரத்தை கையில் எடுப்பதே அலாதி சுகம். கயிற்றை (அல்லது சாட்டையை) அதன் மேல் நேர்த்தியாக இறுக்கமாகச் சுற்றி, அதைச் சரியாகக் கையில் பிடித்துக் சுழற்றி தரையில் விடுவது ஒரு கலை.


தோற்றவர்களின் பம்பரத்தைத் தரையில் வைத்து, மற்றவர்கள் தங்கள் பம்பரத்தால் அதை அடித்துத் துளையிடுவது (ஆக்கர் வைப்பது) இந்த விளையாட்டின் உச்சக்கட்ட விறுவிறுப்பாகும். பம்பரத்தில் விழுந்த தழும்புகளே அன்றைய குழந்தைகளின் வீரப் பதக்கங்கள்.


   


தரையில் சுழன்று கொண்டிருக்கும் பம்பரத்தை, ஒரு சிறிய கயிற்றின் மூலமாகவோ அல்லது விரலாலோ லாவகமாகத் தூக்கி உள்ளங்கையில் ஏந்தும் வித்தை இன்றளவும் பலரைக் வியக்கவைக்கும் திறமையாகும்.


பம்பரம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்குப் பின்னால் அறிவியல் இருக்கு.. அதாவது இயற்பியல் விதிகள் மறைந்துள்ளன.


பம்பரம் அதிவேகமாகச் சுழலும் போது, அது ஈர்ப்பு விசையை எதிர்த்து சமநிலையில் நிற்க உதவுகிறது. பம்பரத்தின் கூர்மையான இரும்பு முனையானது குறைந்த பரப்பளவில் மொத்த எடையையும் தாங்கி நிற்கச் செய்து சமநிலையை ஏற்படுத்துகிறது.


இன்றைய டிஜிட்டல் உலகில் பல பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்துவிட்டாலும், பம்பரம் தன் பிடியை முழுமையாக இழக்கவில்லை. மரத்தாலான பம்பரங்களை மீட்டு, நவீன காலக் குழந்தைகளுக்கு அதன் பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுக்க பல அமைப்புகளும் பாரம்பரிய ஆர்வலர்களும் முயன்று வருகின்றனர். பிளாஸ்டிக் பொம்மைகளைத் தாண்டி, மீண்டும் மரப் பம்பரங்களைச் சுழற்றும் ஆர்வம் மக்களிடம் மெல்ல வளர்ந்து வருகிறது.


இன்றும் கூட பம்பரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எல்லா இடத்திலும் இல்லை.. ஆங்காங்கே அதன் பாரம்பரியம் தொடரத்தான் செய்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக பதின்ம வயதினருக்கு பம்பரம் மிக மிக அவசியமான ஒரு விளையாட்டு. அதை பள்ளிகள் தோறும் விளையாடக் கற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். நிச்சயம் மாணவர்கள் மத்தியில் பம்பரம் விளையாட்டு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்க உதவும்.


பம்பரம் என்பது வெறும் ஒரு மரத்துண்டு மட்டுமல்ல; அது எல்லாரும் சேர்ந்து விளையாடும் ஒற்றுமை, எதைக் கவனித்தாலும் கூர்மையாகப் பார்க்கும் திறன், கண் கை இரண்டையும் சரியாக இணைத்துச் செய்யும் வேகம் மற்றும் நம் சின்ன வயது சந்தோஷங்களை ஞாபகப்படுத்தும் ஒரு பொக்கிஷம்!


இன்று பம்பரம் தினம் கொண்டாடப்படுகிறது. பக்கத்து கடையில் பம்பரம் கிடைத்தால் வாங்கிச் சுற்றி மகிழ்ந்திருங்கள்.

                                                                                           

முந்தைய தலையங்கங்கள்