தென்தமிழ் தலையங்கம்: மிக்கி மவுஸ்.. சிரிப்பின் சக்கரவர்த்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
- சு.தா.அறிவழகன்
காலங்கள் மாறலாம், தலைமுறைகள் கடக்கலாம்; ஆனால், வட்டமான இரண்டு பெரிய காதுகளும், சிவப்பு நிறக் கால்சட்டையும், மஞ்சள் நிறக் காலணிகளும் கொண்ட அந்தக் குட்டி எலியின் மீதான காதல் மட்டும் மனிதகுலத்திற்குக் குறைவதே இல்லை. இன்று நவம்பர் 18—உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த 'மிக்கி மவுஸின்' பிறந்தநாள்.
1928-ஆம் ஆண்டு இதே நாளில், நியூயார்க்கின் காலனி திரையரங்கில் வெளியான 'ஸ்டீம்போட் வில்லி' (Steamboat Willie)* என்ற குறும்படத்தின் வழியே மிக்கி மவுஸ் தன் முதல் அடியை எடுத்து வைத்தது. அன்று தொடங்கிய அந்தப் பயணம், வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், அனிமேஷன் உலகின் போக்கையே மாற்றியமைத்த மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது. வால்ட் டிஸ்னி என்ற கலைஞனின் கற்பனையில் உதித்த இந்தக் கதாபாத்திரம், ஒலியுடன் கூடிய முதல் கார்ட்டூன் படமாக வரலாற்றில் தடம் பதித்தது.
மிக்கி மவுஸின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது வெறும் வரைகலைத் திறமை மட்டுமல்ல; அது பிரதிபலிக்கும் வாழ்வியல் தத்துவமும் கூட. எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காத குறும்புத்தனம், நண்பர்களுக்கு உதவும் குணம், முகத்தில் மாறாத புன்னகை என மிக்கி மவுஸ் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தையைத் தட்டி எழுப்புகிறது.
"எல்லாமே ஒரு சுண்டெலியால் தொடங்கப்பட்டது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது" என்ற வால்ட் டிஸ்னியின் வார்த்தைகள், மிகச்சிறிய தொடக்கம்கூட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் என்பதற்கான சாட்சி. மிக்கி மவுஸ் விளையாட்டு உருவம் அல்ல.. தன்னம்பிக்கையின் அடையாளமும் கூட. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்ற தமிழ்த் தத்துவத்தின் ஆங்கில அடையாளமாகவும் இதை நாம் பார்க்கலாம்.
இன்று செயற்கை நுண்ணறிவும், பிரம்மாண்டமான முப்பரிமாணத் தொழில்நுட்பங்களும் திரைத்துறையை ஆக்கிரமித்திருக்கின்றன. ஆயினும், கறுப்பு-வெள்ளைக் கோடுகளில் பிறந்து, வண்ணமயமான உலகமாக விரிந்த மிக்கி மவுஸின் எளிமைக்கும் வசீகரத்திற்கும் ஈடு இணை எதுவுமில்லை. மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி, மகிழ்ச்சி என்ற ஒற்றை மொழியைப் பேசும் உலகளாவிய தூதுவனாக மிக்கி திகழ்கிறது.
நவீன உலகின் அழுத்தங்களுக்கு இடையே, கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் இந்த மாயாஜால நாயகனுக்கு வயது ஜஸ்ட் 98 தான்.. ஆனாலும், அதன் இளமைக்கு என்றும் முதுமையில்லை. தலைமுறைகள் தாண்டியும் சிரிப்பலையைப் பரப்பும் மிக்கி மவுஸிற்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!