தென்தமிழ் தலையங்கம்: "எனக்கு நானே ராஜா!" - சிங்கிள்ஸ் கொண்டாடும் நவம்பர் 11 தின சுவாரஸ்ய வரலாறு!
-சு.தா. அறிவழகன்
இன்னிக்கு ஹேப்பி சிங்கிள்ஸ் டே மக்களே.. உலகம் முழுவதும் எத்தனையோ தினங்களை நம் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வரிசையில் இந்த சிங்கிள்ஸ் டேவும் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது ஒற்றையர் தினம்.
ஆண் அல்லது பெண் துணையில்லாமல் தனியாக இருப்பவர்களுக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள்தான் இந்த ஒற்றையர் தினம் (Singles' Day). ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி இந்த நாள் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் என பலருக்கும் சிறப்பு நாட்கள் உள்ளன. ஆனால், தனியாக இருப்பவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக உருவான நாள்தான் இந்த 'ஒற்றையர் தினம்'. ஆரம்பத்தில் ஒரு சாதாரண மாணவர் கொண்டாட்டமாகத் தொடங்கிய இது, இன்று உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவாக மாறியுள்ளது.
அது ஏன் நவம்பர் 11ல் கொண்டாடுகிறார்கள்?
இந்த நாளைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. நவம்பர் 11-ம் தேதியை எண்களில் எழுதினால் 11/11 என்று வரும். இதில் உள்ள '1' என்ற எண், தனியாக நிற்கும் ஒரு நபரைப் போலவே உள்ளது. நான்கு '1' எண்கள் ஒன்றாக வருவது, தனியாக இருக்கும் நபர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது. இதனாலேயே இதனை 'இரட்டை பதினொன்று' (Double Eleven) என்றும் அழைக்கிறார்கள்.
ஒற்றையர் தினம் 1993-ம் ஆண்டு சீனாவில் பிறந்தது. சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் (Nanjing University) தங்கியிருந்த நான்கு மாணவர்கள், தாங்கள் தனிமையில் இருப்பதை எண்ணி சற்று யோசித்துள்ளனர். இதற்காக வருத்தப்படக் கூடாது, மாறாக அதனைக் கொண்டாட வேண்டும் என்று நினைத்தார்கள். காதலர் தினத்திற்குப் போட்டியாக, தங்களுக்குத் தாங்களே பரிசுகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே கொண்டாடிய இந்த நாள், Bachelors' Day என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் பெண்களும் இதில் இணைந்து கொண்டதால், இது பொதுவான வார்த்தைக்கு அதாவது 'ஒற்றையர் தினமாக' மாறியது. பல்கலைக்கழகத்திற்குள் தொடங்கிய இந்தப் பழக்கம், சமூக வலைதளங்கள் மூலம் சீனா முழுவதும் பரவியது.
இப்படி ஒற்றையாய் இருந்த இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வுக்குள் அலிபாபா நுழைந்த பிறகுதான் இது ஆன்லைன் வர்த்தக நாளாக மாறியது. 2009-ம் ஆண்டு சீனாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, "தனியாக இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தங்களைத் தாங்களே மகிழ்வித்துக் கொள்ளுங்கள்" என்ற கருத்தை முன்வைத்து, மிகப்பெரிய தள்ளுபடிகளை அறிவித்தது.
மக்களிடம் இதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அன்று முதல் நவம்பர் 11 உலகின் மிகப் பெரிய ஆன்லைன் திருநாளாக மாறி விட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிளாக் ஃபிரைடே' (Black Friday) விற்பனையை விடப் பல மடங்கு அதிகமான வியாபாரம் இந்த ஒற்றையர் தினத்தில் நடைபெறுகிறது. ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்றுத் தீர்கின்றன.
ஒற்றையர் தினம் வெறும் ஷாப்பிங் நாளாக மட்டுமல்லாமல், பல்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது. தங்களுக்குப் பிடித்த உடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உணவுகளை வாங்கி மக்கள் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள்.
தனிமையில் இருக்கும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து விருந்து வைத்துக் கொண்டாடுகிறார்கள். சில இடங்களில் தனியாக இருப்பவர்கள் தங்களுக்குப் பொருத்தமான துணையைத் தேடிக்கொள்ளும் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
தனிமை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம் அல்ல, அதுவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு அழகான நிலை என்பதை ஒற்றையர் தினம் நமக்கு உணர்த்துகிறது. மற்றவர்களின் அன்பிற்காகக் காத்திருக்காமல், நம்மை நாமே நேசிக்கவும், மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இந்த நாள் ஒரு சிறந்த நினைவூட்டலாக அமைகிறது.