தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
- சு.தா.அறிவழகன்
செப்டம்பர் 28 அன்று உலகம் முழுவதும் ‘உலக செய்தி தினம்’ (World News Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
செய்தியாளர்களின் உழைப்பைப் போற்றுவதற்கும், மக்கள் மத்தியில் சுதந்திரமான மற்றும் உண்மையான இதழியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும் இந்நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் 2018-ஆம் ஆண்டில், கனடிய இதழியல் அறக்கட்டளையாலும் (Canadian Journalism Foundation) சர்வதேச செய்தி ஊடக அமைப்புகளாலும் இணைந்து இந்நாள் தொடங்கப்பட்டது. இன்றளவும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான செய்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, உண்மையான செய்திகளின் மதிப்பையும் ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கையும் இந்நாளில் உலகிற்கு உரக்கச் சொல்கின்றன.
அன்றைய காலத்தில் ஒரு செய்திப் பத்திரிகை வெளியாகிறது என்றால், அதில் உண்மைத்தன்மை இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடம் இருந்தது. களத்தில் நின்று, தகவல்களைப் பலமுறை உறுதிசெய்து, நடுநிலையோடு மக்களுக்கு செய்திகளை வழங்கினார்கள். செய்திகளில் உண்மை இருக்கும்.. உண்மையை உள்ளது உள்ளபடி மக்களிடம் கொண்டு சேர்க்கத்தான் அன்றைய ஊடகங்கள் போட்டி போட்டன.
ஆனால் இன்றைய காலகட்டம் முற்றிலும் மாறிப்போயிருக்கிறது. வணிகப் போட்டிகளும், டிஜிட்டல் வேகமும் செய்திகளின் தரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. மக்கள் எதை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதை விட, எதைப் பார்த்தால் பதற்றமடைவார்கள் என்பதை நோக்கியே பெரும்பாலான செய்திகள் உருவாக்கப்படுகின்றன. 'நெகட்டிவ்' செய்திகளும், பரபரப்புச் செய்திகளுமே ஊடகங்களின் முதன்மைப் பொருளாக மாறிவிட்டன.
போதாக்குறைக்கு, சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால் பொய்ச் செய்திகளும் (Fake News), வதந்திகளும் காட்டுத்தீயாகப் பரவுகின்றன. பணம் கொடுத்துப் போடும் செய்திகளும் (Paid News), விளம்பர நோக்கத்திற்காகத் திரித்துக்கூறப்படும் தகவல்களும் சாமானிய வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. எங்கும் பதற்றம், பயம், எதிர்மறை எண்ணங்கள்... இவைதான் இன்றைய செய்தி நுகர்வின் நிதர்சனமாக இருக்கின்றன. ஆனால், ஊடகத் தர்மம் என்பது பரபரப்பை ஏற்படுத்துவது அல்ல; மக்களுக்கு 'உள்ளதை உள்ளபடி' சொல்வது மட்டுமே! உண்மையான தகவல்களை, எந்தவிதச் சாயமும் பூசாமல் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஊடக உலகிற்கு இன்றியமையாத தேவையாக உள்ளது.
இப்படிப்பட்ட அருமையான நாளில் உங்கள் தென்தமிழ் குறித்தும் சற்று சொல்லியாக வேண்டும். 'தென்தமிழ்' தன் தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறது. மக்கள் மனதைப் பயமுறுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவதோ, தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதோ தென்தமிழின் நோக்கம் அல்ல. நேர்மறை மட்டுமே நமது இலக்கு .. அதைக் கொள்கையாகவே வைத்துள்ளது. எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர உலகில், செய்தி வாசிக்கும் வாசகர்களின் மனதை அமைதிப்படுத்துவதும், அவர்களுக்கு நேர்மறை (Positive) எண்ணங்களை விதைப்பதுமே எங்கள் முதன்மை இலக்கு.
வாசகர்களுக்கு உண்மையான, நம்பகமான மற்றும் நேர்மறையான செய்திகளை மட்டுமே கொண்டு சேர்க்கும் தூய பணியில் தென்தமிழ் என்றும் உறுதியோடு செயல்படும். நம்பிக்கையும் நிம்மதியும் நிறைந்த ஒரு புது விடியலை நோக்கி உங்களோடு இணைந்து பயணிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்!
அனைவருக்கும் இனிய செய்தி தின வாழ்த்துகள்.. நல்ல செய்திகளுடன், உண்மைச் செய்திகளுடன் (அதாவது எங்களுடன்) எப்போதும் இணைந்திருங்கள்.