தென்தமிழ் தலையங்கம்: 'நாவிக்' - இனி நமக்கு நாமே வழிகாட்டி.. அமெரிக்காவுக்கு குட்பை!

Su.tha Arivalagan
Nov 02, 2026,10:14 AM IST

- சு.தா. அறிவழகன்


நாம் எங்கு இருக்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்கவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும் ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேப்ஸ் (Google Maps) அல்லது ஜிபிஎஸ் (GPS) வசதியைப் பயன்படுத்துகிறோம். இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையை மாற்றி, இந்தியாவிற்கென்றே தனித்துவமாக ஒரு செயற்கைக்கோள் வழிகாட்டி வந்து விட்டது. அதுதான் 'நாவிக்' (NavIC).


'நாவிக்' என்றால் என்ன?


NavIC என்பதன் முழு வடிவம் Navigation with Indian Constellation என்பதாகும். இதை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் 'மாலுமி' என்று சொல்லலாம். இது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் மத்திய அரசால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் ஜிபிஎஸ் அமைப்பு உலகம் முழுவதும் இயங்கினாலும், இந்தியாவிற்கும் நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி சுமார் 1,500 கி.மீ வரைக்கும் மிகத் துல்லியமான தகவல்களை வழங்குவதற்காகவே 'நாவிக்' அமைப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் இனி அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று சுருக்கமாக  சொல்லலாம்.




நாட்டின் விண்வெளித் துறையில் இஸ்ரோ பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், 'நாவிக்' உருவாக்கம் மிக முக்கியமான மைல்கல்லாகும்.


உலகத்தில் மிகக் சில நாடுகளிடம் மட்டுமே தங்களின் சொந்த நேரடி வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்புகள் உள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தக் கட்டமைப்பை உருவாக்க நிறைய செயற்கைக் கோள்கள் தேவை. இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. இவை பூமியின் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் இருந்து துல்லியமான சமிக்ஞைகளை வழங்குகின்றன.


விண்வெளியில் உள்ள இந்த செயற்கைக்கோள்களில் மிகத் துல்லியமான நேரத்தைக் கணக்கிடக்கூடிய 'ருபிடியம்' அணுக்கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது நமது நாட்டின் விஞ்ஞானிகளின் அசாத்திய திறமைக்குச் சான்றாகும்.


இந்த ருபிடியம் அணுக்  கடிகாரங்கள் என்ன செய்யும்?


சாதாரண கடிகாரங்கள் வினாடிக்கு சில முறை மட்டுமே அதிர்வுகளை உருவாக்கும். ஆனால், ருபிடியம் அணுக்கடிகாரம் என்பது ருபிடியம்-87 (Rubidium-87) என்ற தனிமத்தின் அணுக்கள் வெளிப்படுத்தும் அதிர்வெண்ணைப் (Frequency) பயன்படுத்தி நேரத்தைக் கணக்கிடும் அதிநவீன கடிகாரமாகும். இது ஒரு வினாடி நேரத்தை பில்லியன் கணக்கான அதிர்வுகளாகப் பிரித்து மிகத் துல்லியமாக அளவிடும்.


இதன் துல்லியம் எந்தளவு இருக்கும் என்றால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரே ஒரு வினாடி மட்டுமே முன்னும் பின்னும் மாற வாய்ப்புள்ளது.. அவ்வளவு ஷார்ப் இது!


உங்களுக்கு இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்.. அதுதான் ஏற்கனவே ஜிபிஎஸ் இருக்கிறதே, பிறகு ஏன் 'நாவிக்' வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.


சாதாரண ஜிபிஎஸ் முறையை விட 'நாவிக்' மிகத் துல்லியமான தகவல்களைத் தரும். இது மீட்டர் அளவிற்கும் குறைவான பிழையுடன் (உள்ளூர் பகுதியில் 5 மீட்டருக்கும் குறைவான துல்லியம்) இடங்களைக் காட்டக்கூடியது.


அவசர காலங்களிலோ அல்லது போர்க் காலங்களிலோ வெளிநாட்டு வழிகாட்டுதல் அமைப்புகளை நம்பியிருக்க முடியாது. நம் நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையான ரகசிய மற்றும் தடையற்ற தகவல்களை 'நாவிக்' பாதுகாப்பாக வழங்கும். நம்மைச் சுற்றிலும் எதிரிகள் அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டால் நாவிக்கின் முக்கியத்துவம் நமக்கு ஈஸியாகப் புரியும்.


புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்குப் புயல் எச்சரிக்கைகளைத் துல்லியமாக அனுப்பவும் இது பெரிதும் உதவும்.


பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து, விவசாயம், செல்போன் செயலிகள், மற்றும் ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றுக்கு மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்து நம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும்.


உடனடியாக நாம் இப்போது நாவிக் சிஸ்டமுக்கு மாறப் போவதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் பல நவீன கருவிகளில் 'நாவிக்' தொழில்நுட்பம் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தச் சொந்த வழிகாட்டி அமைப்பு ஒரு பெரும் தூணாக மாறப் போகிறது. இஸ்ரோவின் இந்தச் சாதனை ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்பாகும்.