தென்தமிழ் தலையங்கம்: விஜய்க்கு கூடும் கூட்டம்.. எதைக் குறிக்கிறது?

Su.tha Arivalagan
Oct 01, 2026,10:15 AM IST

- சு.தா.அறிவழகன்


நடிகர் என்ற பிம்பத்தைத் தாண்டி, தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதுப் பாதையை அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார் விஜய். அவர் அரசியலில் களமிறங்கியபோது, "நடிகரைப் பார்க்கத்தான் கூட்டம் கூடுகிறது; இந்தக் கூட்டத்திற்குப் பின்னால் கொள்கையோ அரசியல் தெளிவோ இல்லை" என்று எதிர்க்கட்சிகள் எளிதாகக் கடந்து செல்ல முயன்றன. பிரதான ஆளும் கட்சியாக இருந்த திமுகவோ, அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உதாசீனப்படுத்தியது.


ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார் விஜய். அரசியல் களம் தந்த இந்த வெற்றி, தமிழக வரலாற்றில் மற்றொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.


இப்போது ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஓர் புதிய அரசுக்கு ஆரம்பக்கால அனுபவமின்மை இயல்பானதே என்றாலும், நிர்வாகச் சிக்கல்கள் மக்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. மின்சாரக் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற அன்றாடப் பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. "விஜய்க்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.




ஆனால், இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. ஆட்சி மீதான விமர்சனங்களும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் தீவிரமடைந்து வரும் இக்காலக்கட்டத்திலும், விஜய்யின் நிகழ்வுகளுக்குக் கூடும் மக்கள் கூட்டம் சிறிதும் குறையவில்லை. தாராபுரம், மதுராந்தகம், மதுரை என அவர் செல்லும் இடங்களிலெல்லாம் திரளும் பிரம்மாண்டமான கூட்டம், அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இந்தக் கூட்டம் எதை உணர்த்துகிறது? எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மக்கள் பொருட்படுத்தவில்லையா? அல்லது விஜய் மீது அவர்கள் வைத்த நம்பிக்கை இன்னும் குறையாமல் இருக்கிறதா?


அரசியலில் கூட்டம் என்பது ஆதரவின் வெளிப்பாடுதான் என்றாலும், அதுவே இறுதியான தேர்தல் முடிவோ அல்லது நல்லாட்சிக்கான சான்றிதழோ ஆகிவிட முடியாது. தேர்தல் சமயத்தில் கூடிய கூட்டம் விஜய்யின் மாற்றத்திற்கான பிம்பத்திற்கு வாக்களித்தது. ஆனால், இப்போது கூடும் கூட்டம் அந்த மாற்றத்தை அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பதைக் காணக் காத்திருக்கும் கூட்டமாகவும் இருக்கலாம்.


மக்களின் எதிர்பார்ப்பும், அவர்கள் காட்டும் அன்பும் விஜய்க்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் கைவசம் இருப்பதையே காட்டுகின்றன. ஆனால், இந்தக் கூட்டத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நீண்ட காலம் அரசியல் நடத்த முடியாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, மின்சாரச் சிக்கலுக்குத் தீர்வு காண்பது, சட்டம் - ஒழுங்கை சீராகப் பராமரிப்பது போன்ற நடைமுறை நிர்வாக சவால்களில் விஜய் அரசு எடுக்கும் விரைவான முடிவுகளே, மக்களின் இந்த அன்பை நிலையான அரசியல் ஆதரவாக மாற்றும்.


கூட்டம் என்பது எதிர்பார்ப்பின் அறிகுறி; அதை திருப்திகரமான நிர்வாகமாக மாற்றுவதே ஒரு தலைவனின் உண்மையான வெற்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.