Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
- சு.தா.அறிவழகன்
அரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதற்கு ஏற்ப, மாநில மற்றும் தேசிய அரசியல் சூழல்கள் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில் இனி எங்கள் வழி தனி வழி என்று திமுக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், நீண்ட காலமாக திமுகவுடன் நெருக்கமாக பயணித்து வந்த காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கை கோர்த்ததைத் தொடர்ந்து, திமுக-காங்கிரஸ் இடையிலான நீண்டகால கூட்டணி உறவில் முறிவு ஏற்பட்டது. காங்கிரஸ் மட்டுமல்லாமல், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதன் காரணமாக கோபமடைந்த திமுக, இந்தியா கூட்டணியில் இனி தங்களால் செயல்பட முடியாது என்று அறிவித்து விட்டது. தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கூட்டங்களையும் அது புறக்கணித்து வந்தது. நேற்று கிட்டத்தட்ட இந்தியா கூட்டணியிலிருந்து விலகுவது போன்ற அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. அதாவது "இனி எங்கள் வழி தனி வழி" என்ற அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. இந்நகர்வு தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் உடனான உறவு முறிந்த நிலையில், தேசிய அரசியலில் தங்களின் செல்வாக்கையும் குரலையும் வலுவாகப் பதிவு செய்ய திமுக புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது:
திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பிஆர்எஸ் (முந்தைய டிஆர்எஸ்) மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ஜெகன் மோகன் ரெட்டி) போன்ற சக்திவாய்ந்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அல்லது மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கூட்டணிக் கட்டமைப்பை உருவாக்க திமுக முயல்வதாகத் தெரிகிறது. இதில் சமாஜ்வாடிக் கட்சியையும் இணைக்க திமுக முயலலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் தற்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி நாளை அரசியல் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அப்படி நடந்தால் அந்தக் கட்சியையும் தனது கூட்டணிக்குள் கொண்டு வந்து தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் 1980-கள் மற்றும் 90-களில் உருவாக்கப்பட்ட 'தேசிய முன்னணி' மற்றும் 'ஐக்கிய முன்னணி' போன்ற கூட்டணிகள், மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளன. அதே போன்றதொரு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பை தற்போதைய சூழலில் உருவாக்கவே திமுக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையே இது உணர்த்துகிறது.
கூட்டணிகள் என்பது தேர்தல் கணக்குகளுக்காகவும், ஆட்சி அமைப்பதற்காகவும் உருவாக்கப்படும் தற்காலிக ஏற்பாடுகளே. ஆனால், ஒரு கட்சி தன் கொள்கை மற்றும் சுயமரியாதையை முன்வைத்து எடுக்கும் முடிவுகள் அதன் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.
தேசியக் கட்சிகளைச் சாராமல், மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவது மாநிலங்களின் சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த உதவும் என்ற பார்வையும் உள்ளது. திமுக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை கொள்கையாகக் கொண்ட இயக்கம். எனவே பிராந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்து அது அமைக்கத் திட்டமிடுவதாக கூறப்படும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், பல்வேறு கருத்தியல் கொண்ட மாநிலக் கட்சிகளை ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து நிலையான ஒரு கூட்டணியை அமைப்பது எளிதான காரியமல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். குறிப்பாக நீட் தேர்வு கூடவே கூடாது என்பது திமுகவின் உறுதியான கொள்கை. ஆனால் அந்த கொள்கைக்கு நேர் மாறான கொள்கைகளுடன் கூடிய கட்சிகள் வட மாநிலங்களில் அதிகம். இதுபோன்ற முரண்பாடுகளைக் களைந்து கூட்டணியாக அது மலர்வது எப்படி என்ற கேள்வியும் உள்ளது.
தமிழகத்தில் உருவான அரசியல் மாற்றங்கள் தற்போது தேசிய அரசியல் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. திமுகவின் இந்த புதிய முயற்சி தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும், தேர்தல் களத்தில் இது எத்தகைய மாற்றங்களை உருவாக்கப் போகிறது என்பதும் வரும் நாட்களில் வெளிப்படும்.