தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

Su.tha Arivalagan
Sep 26, 2026,10:20 AM IST

- சு.தா.அறிவழகன்


தொழில்நுட்ப வளர்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் மனித சமுதாயத்திற்குள் நுழையும்போதெல்லாம், ஒருவித அச்சமும் சந்தேகமும் எழுவது மனித இயல்பே. இன்று நாம் செயற்கை நுண்ணறிவைப் (AI) பார்த்து "இது மனிதர்களின் வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமோ?", "மனித இனத்தையே அழித்துவிடுமோ?" என்று அஞ்சுகிறோம்.


ஆனால் உலகம் இதற்கு முன்பும் கூட பல புதுமுக அறிமுகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கியிருக்கிறது. அந்த அபாயங்களையெல்லாம் தாண்டியும் வந்திருக்கிறது, வளர்ந்திருக்கிறது, பிழைத்திருக்கிறது.


மனிதன் தனது அறிவை எப்போது பயன்படுத்த ஆரம்பித்தானோ அன்றே அவனுக்குள் அச்சமும் தோன்றியிருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் கண்டு மனிதன் வியந்ததை விட பயந்ததே அதிகமாக இருந்திருக்கும். இதனால் என்னாகுமோ, ஏதாகுமோ என்ற அச்சம்தான் முதலில் கண்டுபிடித்தவனிடம் இருந்திருக்கும். ஆனால் மனிதகுலம் அத்தனை அச்சங்களையும் தாண்டி பிழைத்திருக்கிறது என்பதுதான் சந்தோஷமான விஷயம்.


15ம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது Printing Press. ஜெர்மனியில் குட்டன்பெர்க் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தபோது, அன்றைய மதத் தலைவர்களும் சமூகப் பெரியவர்களும் கடும் அச்சமடைந்தனர்.




புத்தகங்கள் பெருமளவில் அச்சடிக்கப்பட்டால், தவறான தகவல்களும் மதத்திற்கு எதிரான கருத்துக்களும் பரவி சமுதாயச் சீர்கேடு ஏற்படும் என்றும், மனிதர்களின் நினைவாற்றல் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் பயந்தனர். ஆனால் அந்த அச்சம் பொய்யாகிப் போனது. அச்சு இயந்திரமே உலகெங்கும் அறிவையும் கல்வியையும் மக்களாட்சிப் புரட்சிகளையும் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய கருவியாக மாறியது.


இதேபோல 1800-களில் ரயில் போக்குவரத்து அறிமுகமானபோது, பொதுமக்கள் அதை ஒரு "சாத்தானின் வாகனம்" போலப் பார்த்தனர். ஒரு மணி நேரத்திற்கு 30 மைல் வேகம் (அன்றைய காலத்தில் அது மிகப்பெரிய வேகம்!) பயணம் செய்தால், மனித உடல் அந்த வேகத்தைத் தாங்காமல் வெடித்துவிடும் என்றும், மனிதர்களின் மூளை திரவமாக உருகிவிடும் என்றும் மருத்துவர்களே பயமுறுத்தினர்! மேலும், ரயிலின் புகையைக் சுவாசித்தால் பெண்கள் பித்தாகிவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. இன்று உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், அன்றாடப் பயணத்தின் முக்கிய அங்கமாகவும் ரயில்கள் விளங்குகின்றன.


தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்து வீடுகளுக்கு மின்சாரம் கொண்டுவர முற்பட்டபோது, மக்கள் அடைந்த பயம்  கொஞ்ச நஞ்சமல்ல. மின்சாரம் என்பது சுவர்களில் பாயும் அருவமான ஒரு விஷயம் என்பதால், சுவர்களில் இருக்கும் மின் கம்பிகள் வழியாக விஷ வாயு வெளியேறும் அல்லது தொட்டால் உடனே சாம்பலாகி விடுவோம் என்று அஞ்சினர். நியூயார்க் டைம்ஸ் இதழ் கூட மின்சாரத்தைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று கூட  எச்சரித்தது. இன்று மின்சாரம் இல்லாத ஒரு உலகத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதே!---


1870-களி்ல் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை அறிமுகப்படுத்தியபோது, மக்கள் அதை நேர்மறையாக ஏற்றுக்கொள்ளவில்லை. கம்பி வழியாக குரல் கேட்பதை "சூனியக்கலை" அல்லது "பேயின் குரல்" என்று கருதினர். தொலைபேசி வழி தொடர்பு கொண்டால் மனித உறவுகள் முற்றிலும் அழிந்துவிடும் (இந்த வேலையைத்தான் இப்போது செல்போன் செய்து கொண்டுள்ளது) என்றும், வீட்டில் இருக்கும் தொலைபேசி வழியாக மின்னல் தாக்கி வீடே எறிந்துவிடும் என்றும் பயந்தனர். ஆனால், தகவல்தொடர்பு புரட்சியை ஏற்படுத்தி உலகையே ஒரு சிறிய கிராமமாக மாற்றியது தொலைபேசிதான்.


20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணினிகளும், கால்குலேட்டர்களும் பயன்பாட்டிற்கு வந்தபோது, பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. கால்குலேட்டர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால் மாணவர்களின் கணித அறிவு மற்றும் மூளை வளர்ச்சி முற்றிலும் நின்றுவிடும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலைப்பட்டனர். 1970, 80-களில் கணினிகள் வந்தபோது, "கோடிக்கணக்கான கணக்காளர்கள், எழுத்தர்களின் வேலைகள் பறிபோய்விடும், உலகம் கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தில் மூழ்கும்" என்று உலகெங்கிலும் போராட்டங்கள் நடந்தன.


கணினிகள் பல பழைய வேலைகளை அழித்தாலும், மென்பொருள் துறை  என்ற புதிய பிரம்மாண்டமான துறையை உருவாக்கி பல கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.


90-களின் இறுதியில் இணையம் (இண்டர்நெட்) பரவத் தொடங்கியபோது, அதை பற்றியும் பல்வேறு விசித்திரமான பயங்கள் எழுந்தன. இணையத்தில் மூழ்கிவிட்டால் மனிதர்கள் நேரில் பேசுவதையே நிறுத்திவிட்டு தனிமைப்பட்டுப் போவார்கள் என்றும், 2000-ஆம் ஆண்டு பிறக்கும்போது (Y2K problem) உலகத்தில் உள்ள அனைத்து கணினிகளும் முடங்கி உலகம் இருளில் மூழ்கிவிடும் என்றும் உலகம் அஞ்சியது. நாளைக்கு சாகப் போறோம்டா.. இன்னிக்கே சந்தோஷத்தை அனுபவித்து விடுவோம் என்று நிஜமாகவே பயந்தவர்கள் அப்போது பலர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது.. இணையம் உலகின் வேகத்தையே மாற்றியமைத்து, தகவல் பரிமாற்றத்தை நொடிப் பொழுதாக மாற்றியது.


அந்த வகையில்தான் இப்போது ஏஐயைப் பார்த்து உலகம் அஞ்சத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஏஐ-ஐப் பார்த்து முழுமையாக நாம் அஞ்சத் தேவையில்லை. ஏஐ நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை நாம் அச்சப்பட அவசியமில்லை. அதை ஆக்கப்பூர்வமாக நாம் பயன்படுத்தும் வரை அது நமது அடிமை.. அளவுக்கு மிஞ்சினால்தான் நாம் அதற்கு அடிமையாகி விடுவோம்.




வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாக விளங்கும். மனிதன் அறியாத புதிய விஷயத்தைக் கண்டு பயப்படுவது இயல்பு; ஆனால், அதைத் தன் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது அவனது திறமை. இதற்கு முன்பு வந்த அத்தனை தொழில்நுட்பங்களையும் மனிதன் தனது கட்டுக்குள் வைத்துக் கொண்டதால்தான் அவை மனிதனுக்கு உதவியாக மாறின, உயர்வுக்கு வழி வகுத்தன.


செயற்கை நுண்ணறிவு (AI) என்பதும் அப்படித்தான். மனித மூளைக்கு மாற்றாக அல்லாமல், மனித ஆற்றலை பல மடங்கு உயர்த்தும் ஒரு கருவியாகவே (Tool) அதை நாம் பார்க்க வேண்டும்- பயன்படுத்த வேண்டும். அச்சு இயந்திரம் வந்தபோது கைப்பிரதியை எழுதியவர்கள் பயந்தார்கள், கணினி வந்தபோது தட்டச்சாளர்கள் பயந்தார்கள். ஆனால் மனித இனம் அந்த மாற்றங்களுக்கு ஏற்பத் தன் திறன்களை உயர்த்திக்கொண்டு முன்னேறியதே தவிர அழியவில்லை.


AI-யும் மனித இனத்தின் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியே தவிர, மனித குலத்தின் முடிவு அல்ல.. அதை சரியாக பயன்படுத்தினால் ஏஐ நமக்கு நண்பனாக இருப்பான்.. இல்லாவிட்டால்.. ஷங்கர் படத்தின் அடுத்த கதைக் களமாக அது மாறுவதைத் தவிர்க்க முடியாது!