தென்தமிழ் தலையங்கம் : அனைவரிடமும் கருணை காட்டுவோம்...இன்று உலக கருணை தினம்

Su.tha Arivalagan
Nov 13, 2026,09:20 AM IST

- சு.தா.அறிவழகன்


உலகம் முழுவதும் இன்று அதிகம் தேவைப்படுவது அன்பும் இரக்கமும் கருணையும்தான். அது இல்லாமல்தான் நாம் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இதை வலியுறுத்தும் வகையில்தான் இன்று உலக கருணை தினம் கொண்டாடப்படுகிறது. 


உலக கருணை தினம் என்பது மனிதநேயம், அன்பு மற்றும் இரக்க உணர்வை உலகெங்கும் பரப்புவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 13 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பான சர்வதேச நாளாகும். சாதி, மதம், மொழி, இனம் மற்றும் நாடு கடந்த எல்லைகளைத் தாண்டி மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தியாகக் கருணை விளங்குகின்றது என்பதை நினைவூட்டுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


'உலக கருணை இயக்கம்' என்ற பெயரிலான சார்பற்ற சர்வதேசக் கூட்டமைப்பு மூலம் கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1997-ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கருணை அமைப்புகள் ஒன்று கூடி நடத்திய மாநாட்டின் நினைவாக நவம்பர் 13-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில நாடுகளால் மட்டும் அனுசரிக்கப்பட்ட இந்நாள், தற்போது இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் சமூக அமைப்புகளால் விமரிசையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.




தனிமனிதனிடம் மறைந்திருக்கும் மனிதநேயத்தை வெளிக்கொணரச் செய்து, சமூகத்தில் நல்ல செயல்களை ஊக்குவித்தல் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கிடையே மத, இன, மொழி ரீதியாக இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, அனைவரும் சமம் என்ற ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், இன்றைய இயந்திரத்தனமான மற்றும் போட்டி நிறைந்த உலகில் மனிதர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் வன்மத்தைக் குறைத்து அமைதியான சூழலை உருவாக்குவதும் இதன் அடிப்படையாகும். பசியால் வாடுபவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீது கரிசனை கொள்ளச் செய்வதும் இத்தினத்தின் வழியாக வலியுறுத்தப்படுகிறது.


கருணை காட்டப் பெரிய அளவிலான பணமோ அல்லது பொருளோ தேவைப்படுவதில்லை. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறு செயல்கள்கூட மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வல்லது. சாலையோரம் தவிப்பவர்களுக்கு உதவுவது, ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விப் பொருட்களை வழங்குவது, ஒருவருக்கு அரவணைப்பான புன்னகையைச் பரிசளிப்பது, சக மனிதர்களிடம் கனிவாகப் பேசுவது, பிறர் கூறுவதை பொறுமையாகக் கேட்பது போன்ற எளிய செயல்கள் மூலமும் கருணையை வெளிப்படுத்தலாம். மேலும், சமூக வலைதளங்களில் பிறரை புண்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிடுவதைத் தவிர்த்து, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்வதும், விலங்குகளிடம் இரக்கம் காட்டுவதும், மரங்களை நட்டுப் பாதுகாப்பதும் மனிதநேயத்தின் வெளிப்பாடுகளாகும்.


கருணை என்பது பிறருக்கு உதவுவது மட்டுமல்ல, அது நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் கூட நல்வாழ்வைத் தருகிறது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நாம் மற்றவர்களுக்குச் சிறு உதவி செய்யும் போது, நம் மூளையில் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து வாழ்நாளை நீட்டிக்கவும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழர்களின் உன்னத பண்பாட்டின் வெளிப்பாடு தான் கருணை. உலக கருணை தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்பிற்கான ஒரு நினைவுறுத்தலாகும். சிறிய கருணைச் செயல் கூட ஒருவரின் இருண்ட நாளை வெளிச்சமாக்கக்கூடும் என்பதால், நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள உலகைக் கனிவான இடமாக மாற்றுவதற்கு இந்நாளில் உறுதியேற்போம்.


பிறரிடம் அன்பு பாராட்டுவதற்கும் இரக்கம் காட்டுவதற்கும் அவர்களிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்கும் இன்று பலருக்கு நேரம் இருப்பதில்லை. காரணம் அவரவர் வாழ்க்கையின் ஓட்டம் அப்படி. இயந்திர மயமான உலகில் நின்று பேசுவதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சக உயிர்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்ட வேண்டிய அவசியத்தை இந்த நாள் உணர்த்துகிறது. இன்று நமக்கு அதுதான் அதிகம் தேவைப்படவும் செய்கிறது. நாலு வார்த்தை அன்பாக பேசுவதால் நாம் எந்த வகையிலும் குறைந்து போய்விடப் போவதில்லை. எனவே அனைவரிடத்திலும் அன்பு காட்டுவோம், அமைதியான உலகை உறுதி செய்வோம்.