திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!
Nov 17, 2025,04:36 PM IST
- ரா.பிரேமா
திருப்பதி : திருப்பதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி துவங்கி, நவம்பர் 25ம் தேதி வரை வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினசரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.
பிரமோற்சத்திற்கு முன்னதாக லட்ச குங்கும அர்ச்சனை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தாயாருக்கு சுப்ரபாத சேவையும் அதனை தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. இன்று காலை தனுர் லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மஞ்சள் நிறத்திலான கொடியில், சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அர்ச்சகர் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக யானைகள், குதிரைகள் அணிவகுத்து வர கோவிலுக்குள் கொண்டு சென்றனர். பின்னர் அர்ச்சகர்கள், அபிஷேகம் செய்து கொடியை கயிற்றில் இணைத்து வேத மந்திரங்கள் ஓத, பக்தி கோஷம் முழங்க, தலைமை அர்ச்சகர் கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினார்.
பின்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில், செயல் அலுவலர் அணில் குமார் சிங்கால், இணைச்செயலாளர் வீர பிரம்மம் உள்ளிட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர். இன்று இரவு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இன்று தொடங்கி 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனால் வழக்கமாக தினசரி திருச்சானூரில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
(கட்டுரையாளர் ரா.பிரேமா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)