அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோவிலில் திடீரென ஆய்வு செய்ய சென்ற அமைச்சரின் பிஏவிடமே விரைவு தரிசனத்திற்கு ரூ.4000 வசூல் செய்து, அர்ச்சகர்கள் மாட்டிக் கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ், பல்வேறு கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் உள்ள கோவில்கள் பலவற்றிற்கும் சென்று அவர் ஆய்வு நடத்தினார். அப்போது திருச்சி திருவானைக்காவல் கோவிலில் பிரசாத ஸ்டாலில் ஆய்வு செய்த அவர், பிரசாத பொருட்களின் தரம், காலாவதியாகும் ஆகியவற்றை பரிசோதித்து, தரமற்ற பிரசாத பொருட்களை விற்பனை செய்ததற்காக அங்கிருந்தவர்களை கண்டித்தார். இது போல் இனி அடிக்கடி ஆய்வுக்கு வருவேன், அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என எச்சரித்து விட்டு சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மாஸ்க் அணிந்து, சாதாரண பக்தரை போல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்திற்காக சென்றுள்ளார் அமைச்சர் ரமேஷ். அப்போது அவரை விரைவு தரிசனத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி அங்கிருந்த அர்ச்சகர்கள் அமைச்சரின் பிஏவிடமே ரூ.4000 பணம் கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர், பிறகு ஜி பே மூலமாக ரூ.4000 பணம் அனுப்பி உள்ளார். பிறகு தான் வந்திருப்பது அமைச்சர் என அர்ச்சகர்களுக்கு தெரிய வந்தது. தங்களின் தவறுக்காக அமைச்சரிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மன்னிப்பு கேட்ட அர்ச்சகர்களை மன்னிப்பு கடிதம் எழுதித் தரும்படி கேட்டுள்ளார் அமைச்சர் ரமேஷ். தொடர்ந்து கோவில் அலுவலகத்திற்கும் நேரில் சென்று அவர் ஆய்வு செய்ததுடன், அன்னதான கூடத்தில் பக்தர்களுடன் சென்று அமர்ந்து அன்னதானம் உணவை சாப்பிட்டு பார்த்துள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வால் திருச்செந்தூர் கோவிலில் உள்ள அலுவலர்கள், நிர்வாகிகள் ஆடிப் போய் உள்ளனர். அதே சமயம் அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு, அவரது நடவடிக்கைகள் பக்தர்களிடமும், பொது மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.