திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்!

Su.tha Arivalagan
Jul 08, 2026,03:57 PM IST

- கலைவாணி கோபால்


"திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்"


காஞ்சியில் வண்ணார் இனத்தில் பிறந்தவர் "திருக்குறிப்பு தொண்டர்" அவர் இயற்பெயர் யாரும் அறிவார் இல்லை. அவர் மிகப் பெரும் சிவ பக்தர். சிவனடியார்களை மிகவும் நேசித்து அவர்கள் குறிப்புப்படி நடந்து கொண்டதால் இவர்" திருக் குறிப்பு தொண்டர் " என அழைக்கப்பட்டார்.


அவரிடம் பெரிதாக நிலமும் ,வீடும், இல்லை. வருமானமும் அதிகம் இல்லை. அனுதினமும் அங்கு உள்ளவர்களின் ஆடைகளை துவைத்துக் கொடுப்பதன் மூலம் வரும் தானியமும், உணவுமே ,அவருக்கு வாழ்வாதாரம்.


இவர் சிவ அடியார்களை மிகவும் நேசித்தார். அவர்களை தங்க வைத்து உணவு கொடுக்கும் அளவிற்கு இவருக்கு வசதிகள் இல்லை. ஆனால், படைத்த பெருமானுக்காக ஏதாவது ,செய்ய வேண்டும் . அதனால், அவருக்கு தெரிந்த தொழிலின் மூலம் பெருமானுக்கு சேவைகள் புரிந்து வந்தார்.




அனு தினமும் காஞ்சி  பெருமானை நோக்கி வரும் சிவ அடியார்களின் ஆடைகளை வெளுத்துக் கொடுத்த பின்னரே, இவர் மற்றவர்களின் ஆடைகளை சலவை செய்வார். இந்தத் தொண்டினை இவர் செய்யும்போது பல இடர்களை சந்தித்தார். ஏனென்றால் , இவர் தொழிலை தொடங்குவதற்கு முன் அன்றைய நாளில் ஏதாவது, சிவ அடியாரின் ஆடையை சுத்தம் செய்து தந்த பின்னரே ,மற்ற ஆடைகளை சுத்தம் செய்து கொடுப்பார்.


இதனால், உடையை சுத்தம் செய்து கொடுக்கும் ஊர்க்காரர்களில் சிலர் இவருக்கு உணவு கொடுக்கும் போது, இவரை கடிந்து கொண்டே கொடுப்பார்கள். தொழிலை குறித்த நேரத்தில் செய்யவில்லை. என்று குறை கூறுவார்கள். அதனை அனைத்தையும் பொருட்படுத்தாமல் இவர் சிவத்தொண்டினை நாள்தோறும் சிந்தனையில் சிவனை வைத்து செய்து வந்தார்.


எதிர்வரும் அடியாரை அணுகி விழுந்து வணங்கி அவர்கள் அணிந்திருக்கும் உடையினை அல்லது மாற்றுத் துணிகளை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு மிக நன்றாக அழுக்கு நீக்கி பன்னீர் கலந்த நீரில் அலசி காய வைத்து மகிழ்வோடு கொடுத்து திரும்ப அனுப்புவார்.


இதில் இரு வகையாக உள்ளனர். கோயில் சிலைகளுக்கு சாற்றும் துணிகளை துவைத்துக் கொடுக்கும்  ஒரு வகையினர் உள்ளனர். ஆனால், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் கோயிலில் உள்ள  திருமேனிகளுக்கு சாற்றிய ஆடைகளை துவைக்க முடியாது.


சுவாமி துணிகளை சுத்தம் செய்பவர்களை பார்த்து இவர் மிகவும் ஏங்குவார். ... இறைவனை தீண்டிய ஆடைகளை நாம் தொட்டு துவைப்பதற்கு பாக்கியம் செய்யவில்லையே !என்று நினைத்து கண்ணீர் விடுவதும் உண்டு. நமக்கு இந்த பாக்கியம் இறைவன் தரவில்லையே! என்று கண்ணீர் வடிப்பார்.


அனுதினமும், அவர் சிவனடியாருக்காக காத்திருப்பதும், அதனால் ஊரெல்லாம் அவரை பழிப்பதும், சக தொழிலாளர்கள் அவரை பிழைக்கத் தெரியாதவன், பைத்தியக்காரன், என்று திட்டுவதும், வாடிக்கையாகவே இருந்தது. எனினும், அவர் சிவத்தொண்டியினை ஒருநாளும் தவறாமல் செய்து வந்தார்.


ஒருவன் மனதால் தன்னை தேடினால் ஓடிவந்த நிற்பவர் அல்லவா ?சிவபெருமான். பக்தி மிக்க மனதில் தேடல் தானே, கடவுளுக்கான அழைப்பு மணி. இவரின் பக்தியினை உலகறிய செய்வதற்காக "பெருமானே "இவரை நாடி வந்தார். எவ்வாறு என்றால்? ஒரு அடியாரை போல, 


வழக்கம் போல, அவருடைய அன்றைய நாளில் முதல் வேலையாக சிவனடியாரை தேடினார். ஆனால், அன்றைய நேரம் கழிந்தும் யாரும் வரவில்லை. வழக்கமாக ஊரில் உள்ளவர்கள் அழுக்குத்  துணிகள் அவரிடம் முட்டைகளாக குவிந்து இருந்தது. சிவ அடியார்களின் ஆடைகளை வெளுத்த தந்த பின்னரே ,அவர் மற்ற ஆடைகளை துவைக்க தொடங்குவார். அன்று நேரம் ஆகியும் யாரும் வரவில்லை.


ஏற்கனவே ,அங்கு உள்ள ஊர்க்காரர்கள் இவரை பல வார்த்தைகளில் வசை பாடுவார்கள். அன்றும் நேரம் கடந்து கொண்டே இருந்தது. எந்த அடியாரையும் காணாது?  இவர் மனம் மிகவும் கலங்கிய வேளையில் நம் பெருமானே சிவனடியார் கோலத்தில் இவர் முன் வந்து கொண்டு இருந்தார்.


அவரைக் கண்டவுடன் திருத்தொண்டர் நாயனாருக்கு மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. அவரை எதிரில் வரவேற்று அவர் காலியில் விழுந்து வணங்கி அவரிடம், அவரின் அழுக்கு ஆடையினை சலவை செய்து தருவதாக கூறி கேட்டார்.


'சிவன் அருள் உனக்கு கிடைக்கட்டும்' என்று ஆசி கூறி நான் அவசரமாக கோவிலுக்கு செல்கிறேன். எனக்கு உங்களின் எந்த உதவியும் தேவையில்லை என்று அந்த அடியார் கூறினார். அனுதினமும் ,ஏதாவது ஒரு அடியாரின் ஆடைகளை துவைத்துக்  கொடுத்த பின்  அந்நாளில் மற்ற பணியை தொடங்குவேன் . என்றும் வெகு நேரம் ஆகியும் யாரும் இல்லை. 'நீங்கள் மட்டுமே வந்துள்ளீர்கள். தயவு செய்து உங்கள் அழுக்கு ஆடையினை கொடுங்கள் ,நீங்கள் கோயில் சென்று திரும்பி வருகையில் உங்கள் ஆடையினை  அழுக்கு நீக்கி  சுத்தமாக தந்து விடுகிறேன்.  என்று கூறி வாங்கினார். சரி என்று அவரும் கொடுத்துவிட்டு ஆலயத்திற்கு சென்றார். 


நாயனாரோ! அந்த ஆடைகளை மிக மிக கவனமாக வெள்ளாவியில் வெளுத்து பன்னீர் கலந்த நீரில் அலசி ஆற்றங்கரையில் ஓரம் இருந்த நாணல் மீது பயபத்தியுடன் காய வைத்தார். அப்போது தான் நம் பெருமான் ஆட்டத்தை ஆரம்பித்தார். பெரும் காற்று வீசத் தொடங்கியது.நாயனார் எவ்வளவோ முயன்றும் காற்றின் வேகத்தில் அடியாரின் ஆடை காற்றில் பறந்து சென்று ஆற்றங்கரையின்  ஓரம் இருந்த புதரில் போய் விழுந்தது. அதை எடுக்கும் வேளையில் அந்த ஆடை ஆனது சேதமானது. என்ன செய்வது ?என்று தெரியாமல் அலறி தவித்து நின்றார்.


சற்று நேரத்தில் காற்றும் , மழையும், மெல்லக் குறைய த் தொடங்கியது. நாயனாரை நோக்கி சிவ அடியார் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட நாயனார். அவரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ,நாயனார் நெருப்பில் விழுந்த புழுவைப்போல துடித்துக் கொண்டிருந்தார்.


நாயனாரை கண்ட அடியார். முகமலர்ச்சியுடன் நாயனாரை நோக்கி தொண்டனே 'என் ஆலய தரிசனம் நிறைவேறிற்று என் துணியினை அழுக்கு நீக்க உதவிய உனக்காகவும், வேண்டிக் கொண்டேன். இதோ 'திருநீறு பூசிக் கொள் 'என்று சொல்லி கொடுத்து நீறினைக் கொடுத்துவிட்டு, ஆடையினை திருப்பிக் கொடு என்று கேட்டார்.


கனத்த இதயத்தோட அதை வாங்கி பூசிக் கொண்டார் நாயனார். எப்படி சொல்வது ?என்று தெரியாமல் நடந்ததை கூறினார். அதுவரை சாந்த கோலம் காட்டிய அடியார். அதன் பின் ருத்ர கோலம் காட்டினார். உன்னிடம் என் துணியினை சலவை செய்து தா என்று கேட்டேனா ?நீயாக வந்தாய் ,கேட்டாய் ,அதைப் பெற்றாய், மழை வரும் போகும் ,காற்று வீசும் ஆனால் துணியினை காக்க வேண்டியது. உனது பொறுப்பு தானே! என்று கோபத்தீயில் நாயனாரை  வார்த்தைகளால் எரித்தார்.


உனக்கு தொழில் தான் முக்கியம். அதனால் ,தான் பேருக்காக அடியாரின் ஆடையை வாங்கி துவைக்கிறேன் .என்று சொல்லி காற்றில் பறக்க விட்டாய். நீ 'பக்தனே அல்ல! மாறாக சிவனடியார் ஆடையினை துவைத்து ஊரில் மதிப்பார்கள் என்றும் உன் தொழில் பெருகும் என்று சித்தம் கொண்ட கயவன் என்று ஏசினார்.


அவரால் எல்லா கடுமையான வார்த்தைகளையும் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் அவரின் பக்தியை சிறுமைப்படுத்தியபோது அதை ,அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு சமாதானப்படுத்தியும் சிவனடியார் சமாதானமாக வில்லை. என்ன செய்வது என்று தெரியாமல்  சிவா அடியார்களின் துணியை துவைக்கும் சலவை கல்லிலேயே தன் தலையை மோதி உயிரை விட சித்தம் கொண்டு தன் தலையை மோதினார் .


அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ ஒரு கை வந்து அவரின் தலையை தாங்கி பிடித்தது. ஆம், எந்தக் கல்லில் மோதி தன் உயிரை விட எண்ணினாரோ? அந்தக் கல்லே தெய்வமாக மாறிற்று .தொண்டர் நடுங்கும் கரங்களுடனே அதை வணங்கி பேச்சற்று, மூச்சுற்று, நின்றிருக்க அதன் அருகில் சிவன் விடை மேல் பார்வதியுடன் தோன்றி வாழ்த்தினார்.


"அன்பிற்குரிய திருகுறிப்பு தொண்டா" உன் பக்தி இணை சோதிக்கவே நாம் அந்த அடியார் வேடத்தில் வந்து உன்னை சோதித்தோம். உன் அளப்பரிய பக்தி மெய் ஆயிற்று .நீ பூமியில் குறித்த காலம் முடிந்ததும், எம்மை வந்து கைலாயம் அடைவாய் .என்று ஆசி கூறி மறைந்தனர்.


அடியார்  பெரும் மகிழ்ச்சியில் மனம் துள்ளி குதித்து.உருகி உருகி சிவனை போற்றினார் .சிவனருள் பெற்ற தனி ஏகாலியர். என சமூகம் அவரை கொண்டாடியது . எந்த ஊர்க்காரர்கள் அவரை குறை கூறினார்களோ? அவர்களோ! இன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.அதுமட்டுமல்லாமல், 63 நாயன்மார்களில் இவரும் ஒரு நாயனாராக இன்றளவும் கோயிலில் உள்ளார்.


நாம் எல்லோரிடமும் பக்தி உண்டு .ஆனால், இறைவன் காரியத்தை பின்னால் போட்டுவிட்டு நம் காரியத்தை நோக்கி செல்கிறோம். ஆனால், நாயன்மார்கள் அனைவரும் இறைவனையும் முன்னிறுத்திய தன் தொழிலை தொடங்கினார்கள். அதனாலே, அவர்கள் இன்றும் பக்தியில் தனி இடத்தில் உள்ளனர்.


"திருக்குறிப்புத் தொண்டர்" நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சியில் "தர்மமஹாதேவீச்சுரம்,  மாணிக்கேஷ்வரன்" என்று அழைக்கப்படும் முக்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்றளவும் இவரின் குருபூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் எல்லா ஆலயங்களிலுமே இவருக்கான குருபூஜை நடந்து வருகிறது.


எல்லா நாயன்மார்களும் இறைவனுக்கு கொடுத்தது ஒன்று மட்டுமே .அது அன்பு மட்டுமே . அன்பும் சிவமும் ஒன்று என்ற நிலையிலே பத்தி செலுத்தி கைலாயம் அடைந்தனர்.