தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!

Su.tha Arivalagan
Feb 03, 2026,11:45 AM IST

- ரதிதேவி


அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் - பண்பொழி குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அருமையான முருகன் திருத்தலம் இது. அதுகுறித்து இப்போது பார்ப்போம்.


தென்றல் தவழும் திரிகூட மலையின் ஒரு பகுதியான, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் குன்றில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் எம்பெருமான் முருகன்.


இத்தலத்தில் முருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருள் செய்கிறார்.


பொதிகை மலைச் சாரலில் உள்ள தென்காசி மாவட்டத்தில், பண்பொழி என்னும் ஊரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. குறுமுனிவர் அகஸ்தியர், இத்தல முருகப்பெருமானை நேரில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலை அடைய 500-க்கும் மேற்பட்ட படிகள் உள்ளன. பக்தர்கள் ஏறிச் செல்லும் வழியில் இளைப்பாறுவதற்காக ஆங்காங்கே மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




மலை உச்சிக்கு வாகனங்கள் செல்வதற்கென பிரத்யேகச் சாலை வசதிகளும் உள்ளன. மலையின் உச்சியில் இருந்து பார்க்கும்போது, மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் பசுமையான காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.


தைப்பூசத் திருநாளில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருவார்கள். பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் "அரோகரா" கோஷத்துடன் முருகனைத் தரிசனம் செய்வர்.


பொதிகை மலையில் உற்பத்தியாகும் புனிதமான குற்றால அருவி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. எட்டு மாதக் குழந்தையை இத்தலத்துப் படிக்கட்டுகளில் நடக்க வைத்தால், அக்குழந்தை விரைவில் நடக்கத் தொடங்கும் என்பது முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள நீரோடைகளில் நீராடிவிட்டு, மனமுருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! அருள் தருவார் எம்பெருமான் முருகன்!