கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
Jan 08, 2026,06:02 PM IST
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனின் கருத்து தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அன்புமணி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டணி பற்றி அறிவித்தார்கள். ஆனால் இந்த கூட்டணியை ஏற்ற முடியாது. இது நீதிமன்ற அவமதிப்பு. பாமக.,வின் கூட்டணி பற்றி தான் மட்டுமே பேச முடியும் என அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேட்டியொன்றில் பேசிய திருமாவளவன், "அதிமுக - பாஜக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கே பெரும் திண்டாட்டம் நிலவுகிறது" என்று விமர்சித்துள்ளார். பாமக ஏற்கனவே தங்கள் அணிக்கு வந்துவிட்டதாக அதிமுக மார்தட்டிக் கொண்டாலும், அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏற்கனவே இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள், மீண்டும் இணையப் பெரும் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணிக்கு பாஜக தவிர வேறு எந்த கட்சியும் வரவில்லை என பலரும் கூறி வரும் நிலையில், தற்போது பாமக வந்து இணைந்திருப்பதை திருமாவளவன் விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.