பெருமாளே போரொளியாக இணைத்துக் கொண்ட.. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
- கலைவாணி கோபால்
"செம்மையே திருநாளை போவார்க்கும் அடியேன்"-சுந்தரமூர்த்தி நாயனார்
சோழ நாட்டின் காவேரியினை ஒட்டி தென் பக்கமாக இருக்கின்ற ஊர் ஆதனூர். அக்காலத்தில் அது மிக வளமான ஊராக இருந்தது. அந்த ஊரில் விளைநிலங்கள் நிறைய இருந்தன அது மட்டுமல்லாமல், எப்போதுமே பசுமையாக காணப்பட்ட ஊர் பசு மாடுகளும் நிறைய கூட்டம் கூட்டமாய் இருந்தன.
செழுமை இருக்கும் இடங்களில் தொழில் செய்யும் மக்களும் இருப்பார்கள். அவர்கள்..... விவசாயிகள், ஆயர்கள், புலையர்கள் ,என வகைப்பட்டு வாழ்ந்து வந்தனர்.
அதில் புலையர் எனப்படும் மக்கள் போரில் யானையின் மேல் அமர்ந்து முரசடித்தலும், பறை அடித்தலும், ஊரில் பிணங்களை எரித்தும் அவர்கள் தொழிலை செய்து வந்தனர். குறிப்பாக ஊரில் மாடுகள் ஏதாவது , இறந்தால் அதை எடுத்து அதன் தோலை உரித்து இசைக்கருவிகளுக்கும் பயன்படுத்தி வந்தனர்.
(கொரோனா நோய் தொற்று பரவி வந்த நேரம் சீன மக்கள் யாரேனும் ஒருவர் வந்தால் கூட அவர்களிடம் இருந்து நோய் பரவும் என நாம் கருதி அவர்களின் ஊரைத் தவிர மற்ற ஊர்களுக்கு அவர்கள் எங்கும் செல்லாமல் அனைத்து நாடுகளும் தடுத்தது.) அதுபோலவே, புலையர்கள் இறந்தவர்களை பபுதைப்பதும், எரிப்பதும், மாடுகள் இறந்தால், அது இறந்த பின்பு அதன் தோலை உரித்து எடுப்பதும் மாமிசத்தை உண்பதும், கருத்தில் கொண்டு அவர்களின் மூலமாக நோய்கள் பரவும் என கருதி மக்கள் அவர்களை சற்று தள்ளி வைத்து உறவு கொண்டனர்.
(சாதி என்பது அன்று வழக்கத்தில் இல்லை தொழில் ரீதியான பிரிவுகள் மட்டுமே இருந்தது)
ஊருக்கு தேவையானதை அவர்கள் செய்து கொடுத்துவிட்டு தங்களுக்கு தேவையானதை அவர்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாய் வாழ்ந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல்,.... மன்னனே ஆனாலும் அவனுக்கு கடைசி காரியம் செய்யும் தகுதி புலையர்களுக்கே இருந்தது.
அப்படிப்பட்ட புலையர் இனத்தில் ஆதனூர் புதுச்சேரியில் பிறந்தவர் நந்தனார். நந்தனாருக்கு இயல்பாகவே பக்தி இருந்தது . தாயின் மடியினை தேடும் கன்று போல அவர் பக்தி மிக்க மனம் எப்போதும் சிவனையே நினைத்து இருந்தது.
நந்தனாரின் குலமோ! காலையெல்லாம் அலைச்சலும் ,மாடு உரிப்பதும், மாலையில் கள் குடிப்பதும் கொண்டதாக இருந்தது. அதனால், அவர்களுக்கு பெரிதாக தெய்வ வழிபாடு இல்லை. சிறு தெய்வத்தை வணங்கும் முறையை பின்பற்றி வாழ்ந்து வந்தனர்.
ஆனால் நந்தனாரோ! அவர்களிடம் இருந்து வேறுபட்டவர் கள் அருந்தும் எந்த கெட்ட பழக்கங்களும் அவரிடம் இல்லை.
அவரால் ஆலயத்திற்குள் நுழைய முடியாது. ஆனால் ,ஆலயத்தில் நடக்கும் ஆராதனை, சாஸ்திரம், சம்பிரதாயம், சிவனின் திருவிளையாடல், கதைகள், சமய நெறிகளை எல்லாம் அவர் வெளியில் இருந்து காதில் கேட்டு மனதால் உணர்ந்து உள்ளத்தில் ஞானத்தீயை வளர்த்துக் கொண்டார்.
"கன்று வளர்ந்து காளையாவது போல," அவரின் மனம் சிவன் பால் திரும்பி ,திரும்பி, பக்தி வளர்ந்து கொண்டே இருந்தது . தொழில் கருவிகள் செய்யும் அவசியமாக அவர் ஒரு முறை திருப்புன்கூர் பக்கம் செல்ல வேண்டி இருந்தது. அது ஒரு சிவன் கோயில் .மயிலாடுதுறை பக்கமாக உள்ளது .புங்கை மரத்தை தல விருட்சம்மாக கொண்டதால் அதற்கு அப்பெயர் பெற்றது.
சுந்தரர் பெருமானும், அவரின் அடியார் கலிக்காம நாயனாரும் சேர்ந்து உருகி வழிபட்ட தலம். தேவாரம் எல்லாம் பாடப்பட்ட தலம். காலை நேர பூஜை முடிந்த நேரமாக இருந்தது. அவ்வழியே சென்ற நாயனார் . அவரின் அதீத அன்பு சிவபெருமானை காண வேண்டும் என்ற அவா!, கோயிலின் முன்னால் நின்று சிவனை காண முயற்சித்தார். ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியாது.
நந்தனாரின் பக்தி மிக்க மனதின் கலக்கத்தை அறிந்த சிவபெருமான். முதல் முறை தன்னை காணும் முன் அவனுக்கு ஒரு அற்புதம் செய்ய முயன்றார். சிவாலயங்களில் நந்தி என்பது சிவலிங்கத்திற்கு மிக நேராக அமர்ந்திருக்கும் .ஆகம விதிப்படி அதுதான் சரியானது . நந்தி என்பது மானிட ஆன்மா ஆன்மா எப்போதும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும். அதன் தத்துவமாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, நந்தனாரின் ஆன்மா இறைவனின் நோக்கி இருக்கும் போது , ஆத்மா தத்துவமான நந்தி அங்கு தேவையில்லை? ஆத்மாவே சிவனில் கலந்த பின் நந்தி எதற்கு நந்தனார் கலங்கி நின்ற போது ,அந்த அதிசயம் நிகழ்ந்தது அசைக்க முடியாத நந்தி சிலை சில அடி வலப்புறம் நகர்ந்தது. குருடன் கண் பெற்றது போல! மிக மிக பரவசமாக சிவலிங்கத்தை கண்டு மனதில் ஆனந்த கூத்தாடினார் நந்தனார்.
விலகிய நந்தி விலகியே இருந்தது. இன்றும் அப்படியே திருப்புன் கூர் ஆலயத்தில் நந்தியம் பெருமான் காட்சியளிக்கிறார். மாபெரும் தரிசனம் கிடைத்த நிலையில், 'உள்ளூர் குன்றில் ஏறியவன் எவரெஸ்டில் ஏற வேண்டும் 'என ஆசைப்படுவது போல, திருப்புன்கூரில் நந்தியினை விலக்கி வைத்த சிவபெருமான். தில்லையிலும் தனக்கு அற்புதம் புரிவார் என்ற நம்பிக்கையில் , தில்லை கூத்தனை காணும் அவாவும் அவருக்கு பெருகிற்று! எல்லோரிடமும் நான் தில்லைக்கு செல்வேன். நாளை தில்லைக்கு செல்வேன்.... என்று சொல்லிக் கொண்டே இருந்தார். யார் கேட்டாலும் நாளை போவேன்! நாளை போவேன்! என்று சொன்னதாலேயே அவர் "திருநாளைக்கு போவார்" என்று அடைமொழிக்கு ஆளானார்.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு காலங்கள் கடந்த பின் நந்தனுக்குள் நம்பிக்கை மட்டும் குறையவில்லை .ஒரு கட்டத்தில் ஊரில் இருப்பதைவிட தில்லைக்கு சென்று முயற்சிக்கலாம் .என கிளம்பிவிட்டார் .தில்லை செல்லும் வழியில் தான் அந்த திருப்புன்கூர் உண்டு அந்த குளத்தில் குளித்து மறுபடியும் சிவனை வணங்கி விட்டு தில்லை நோக்கி நடந்தார் நந்தன்.
தில்லை கோவில் அன்று பிரம்மாண்டமாக இருந்தது .தில்லை வாழ் அந்தணர்கள் அங்கும், இங்கும், பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். யாகங்கள் புகைகள் ,மந்திர சத்தங்கள் என நந்தன் காதில் விழுந்து கொண்டே இருந்தது. நாம் ஊருக்கு திரும்பி போக முடியாது. என்று தெரிந்தும் அவரின் அவா மேலும் பெருகி ஒரு நம்பிக்கை வளர்த்துக் கொண்டது .ஊரும் திரும்ப முடியாது. அவமானம் வந்துவிடும். என்ற நிலையில் அவரின் கடைசி சரணாகதி சிவனாய் மட்டுமே இருந்தார்.
அவர் தில்லை ஆலய வாசலின் ஓரமாய் தங்கி அங்ககேயே இருந்தார். அப்போது அவரின் கனவில் சிவபெருமான். "என் மனதுக்கு உகந்த நந்தனே "நாளை காலை உனக்காக ஆலய கதவு திறக்கப்படும். அப்போது நீ" தீ "மிதித்து உள்ளே வந்து என்னை சந்திப்பாய் ."என சொல்லி மறைந்தார்.
அதே நேரம் தில்லைகவாழ் அந்தணர்களுக்கும் அதே கனவு வந்தது. "என் அடியான் ஒருவன் என மதியலோரம் சுருண்டு படுத்திருக்கின்றான்" நாளை அவனை அழைத்து வந்து "தீயில் நடக்க வைத்த பின்" எம் சன்னதி அழைத்து வருவீராக" என சொல்லி மறைந்தார்.
அந்தணர்களும் காலையில் பெருமான் கூறியபடி கோயில் வாசலை நோக்கினர். அங்கு நந்தனார் படுத்துக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி பெருமான் கூறியதை கூறி தீமூட்டி தீயில் இறங்க சொல்லினர். மலை போல் இருந்த தீயில் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடியே தீ விட்டு வெளியே வந்தார் . வெளியே வந்தவர் நெருப்பில் இட்ட தங்கத்தை போல தகதக என மின்ன ஆரம்பித்தார்.
எப்படி என்றால்! சாதாரண நந்தனார் குடுமி வைத்து, பூனல் போட்டு, நெற்றியில் நீறுபூசி ஒரு அந்தணனாகவே தோன்றினார். அனைத்து அந்தணர்களும், இக்காட்சி பார்த்து திகைத்து நின்றனர்! ஆலயத்தில் உள்ளே சென்ற நந்தனார் சிவலிங்கத் திருமேனி நேருக்கு நேர் பார்த்து உள்ளம் உருகிக் கொண்டிருந்த வேளையிலே பெருமாள் அவரை பேரொளியாக இணைத்துக் கொண்டார்.
(நந்தனார் வரலாறு இப்படியும் சொல்லப்படுகிறது. பிராமண பண்ணையாரிடம் நந்தன் வேலைக்காரன் ஆக இருந்ததாகவும், பிராமணர் அவரை அதிக வேலைகள் கொடுத்து தில்லைக்கு போக விடாமல் தடுத்ததாகவும் 40 வேலி நிலத்தை (கிட்டத்தட்ட 240 ஏக்கர்) நிலத்தை விளைவித்த பிறகு தில்லைக்கு அனுப்புவதாக மிரட்டினார் .என்ற கதையும் சொல்லப்படுகிறது. இது சினிமா பாணிக்காக மட்டுமே மிகையாக சொல்லப்படும் கதை. என்று கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல!)
புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று நந்தனார் இறைவனோடு கலந்த நாள் .என்பதால் அவருக்கான குரு பூஜை அன்று தான் நடைபெறுகிறது.
திருப்புன்கூர் ஆலயத்தின் உள்ளே நந்தனாருக்கு சிலை உண்டு .அப்படியே ஆலயத்தின் வெளியே அவர் வழிபட்ட இடத்தில் தனிச் சன்னதியின் அவருக்கு இன்றளவும் உண்டு.
எல்லா நாயன்மார்கள் கதையிலும் கூறப்படும் கூற்று ஒன்று மட்டுமே!. இறைவனிடத்தில் அன்பு மட்டுமே அவனிடம் கொண்டு செல்லும். ஜாதியோ! குலமோ! வேறு தகுதிகளும் தேவையில்லை. அன்பு ஒன்றை மட்டுமே கொண்டு இறைவனிடத்தில் நாமும் சரணாகதி அடையலாம். என்று கூற்று மட்டுமே விளக்கி சொல்லப்படுகிறது.