கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

Su.tha Arivalagan
Jun 22, 2026,10:24 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஆசிரியர் பொன் ரேகா ஒரு அசத்தலான தமிழ்ச் சாதனையைப் படைத்துள்ளார்.


தமிழ் மொழியின் தொன்மையும், அதன் இலக்கிய வளமும் உலகறிந்த ஒன்று. சங்க இலக்கியங்களுக்குப் பிறகு தமிழின் வாழ்வியல் நெறிகளை உலகிற்கு உணர்த்தியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட 18 அறநூல்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பை, இன்றைய தலைமுறையினர் வியக்கும் வண்ணம் புதுமையான முறையில் உருவாக்கி உலகச் சாதனை படைத்துள்ளார் ஆசிரியரான பொன் ரேகா.


நெல்லை மண்ணைச் சேர்ந்த ஆசிரியை த. பொன் ரேகா அவர்களின் இந்த அசாத்தியமான முயற்சியும், அதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களையும் பார்ப்போம்.


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் த. பொன் ரேகா. ஆசிரியப் பணியோடு நின்றுவிடாமல், தமிழ் மொழியின் மீதும், குறிப்பாக உலகப் பொதுமறையான திருக்குறள் மீதும் தீராப்பற்று கொண்டவர். கல்வியில் புதுமைகளைப் புகுத்துவதிலும், தொன்மையான தமிழ் எழுத்து வடிவங்களை மீட்டெடுப்பதிலும் இவர் கைதேர்ந்தவர்.




ஆசிரியை பொன் ரேகா அவர்களின் கல்வி மற்றும் தமிழ்ப் பணிக்காக தமிழக அரசின் உயரிய நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இதுவரை 200க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார்.


4 × 4 சென்டிமீட்டரில் 18 நூல்கள்: வியக்க வைக்கும் மைக்ரோ ஆர்ட்!


பொதுவாகப் பெரிய வடிவிலான புத்தகங்களாக நாம் பார்த்துப் பழகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தையும், மிகச் சிறிய வடிவில், அதாவது 4 × 4 செ.மீ நீள அகலத்தி* மிகத் துல்லியமாகக் கையடக்க நூல்களாக (Miniature Books) உருவாக்கி அசத்தியுள்ளார்.


இந்த 18 நூல்களையும் கைகளில் ஏந்தும்போது, தமிழின் ஒட்டுமொத்த அற இலக்கியமும் நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.


இதற்கு முன்பும் ஆசிரியர் பொன் ரேகா பல தொன்மையான தமிழ் எழுத்து வடிவங்களைக் கொண்டு பல்வேறு புதுமையான நூல்களை உருவாக்கியுள்ளார். 


தமிழி எழுத்தில் திருக்குறள் & கையடக்கத் திருக்குறள்

தமிழி எழுத்தில் நாலடியார்

வட்டெழுத்தில் மூவர் ஆத்திசூடி

தேக்கு மரத்தாலான பிரம்மாண்ட திருக்குறள் நூல் ஆகியவைய அவை.


தேடி வந்த உலகச் சாதனை அங்கீகாரம்




ஆசிரியை பொன் ரேகா அவர்களின் இந்த அசாத்தியமான நுண் கலைப் படைப்பைக் பாராட்டி, பெங்களூரைச் சேர்ந்த பிரபல உலகச் சாதனை அமைப்பான யூனிட்டி யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Unity Universe Book of Records) நிறுவனம் இதனை ஒரு புதுவிதமான உலகச் சாதனையாக அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியுள்ளது.


ஏற்கனவே தனது தனித்துவமான படைப்புகளுக்காக 15-க்கும் மேற்பட்ட உலகச் சாதனைகளைப் புரிந்து, உலகச் சாதனைப் புத்தகங்களில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் ஆசிரியை பொன் ரேகா என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைத் தாண்டி, தமிழின் பெருமையை எளிய முறையிலும், கவர்ச்சிகரமான முறையிலும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆசிரியை பொன் ரேகா மேற்கொண்டு வரும் இந்த முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.


கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை உருவாக்கிய இந்த நல்லாசிரியரின் அரிய முயற்சியைப் பாராட்டி கல்வித் துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.


கைக்குள் அடங்கிய தமிழ், உலக அரங்கில் ஆசிரியை பொன் ரேகா அவர்களின் வழியாக மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது!


தொடர்ந்து அசத்துங்க மேடம்!