திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Meenakshi
Dec 05, 2025,02:40 PM IST

மதுரை: திருப்பங்குன்ற மலை உச்சயில் தீபம்  ஏற்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு CISF பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்,  CISF வீரர்களின் அதிகாரம் என்ன, காவல்துறை பாதுகாப்பு தர அனுமதி மறுத்ததால் CISF உதவி நாடப்பட்டதா என்றும் வினவினர். 


மத நல்லிணக்கம் என்பது அனைவருக்குமானது என்றும், ஒருவரை எதுவும் செய்யவிடாமல் தடுப்பது மத நல்லிணக்கத்தை பேணுவது ஆகாது என்றும், அவரவருக்கு உரிய மத உரிமையை அனுபவிக்க விட வேண்டும் என்றும், இருதரப்பும் இணைந்து தங்களுக்கு உரிமையானதை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ராம ரவிக்குமார் மீதுதான் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதிட்டது.




தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என கூறி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இந்தநிலையில், அனைத்து வழக்குகளையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்கப்படும். இந்த பிரச்சனை தீவிரமானது புதிய இடையீட்டு மனுதாரரை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி விசாரணையை டிச 12ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.