திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்

Su.tha Arivalagan
Feb 02, 2026,05:53 PM IST

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரை கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உள்ளார்.


திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முன் ஏற்பாடுகளைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, "மலையேற அனுமதிக்க முடியாது; வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயார் எனப் போலீஸ் கூறினாரா?" என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வந்த அதிகாரிகள் புன்னகையுடன் வந்ததைக் கண்டு அதிருப்தி வெளியிட்டது. இத்தகைய முக்கியமான விவகாரத்தில் அதிகாரிகளின் அணுகுமுறை பொறுப்பற்றதாக இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.




இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்றைய சூழலில் விரும்பத்தகாத செயல்கள் ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், நடந்த நிகழ்வுகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தங்கள் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை முடித்து வைக்க வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் மற்றும் போலீசாரை நீதிபதிகள் மிக கடுமையாக சாடியதுடன், சரமாறி கேள்விகளை முன்வைத்தும், தங்களின் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக நீதிபதிகள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.