திருப்பரங்குன்றம் மலை ஏற 50 பேருக்கு மட்டுமே அனுமதி; பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கூட்டமாக மலை ஏற முயன்ற பக்தர்கள் மத்திய மற்றும் மாநில காவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ளது. மலை மீது அனைத்து பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் நேற்று கூறி இருந்தது. இதனால் அனைவரையும் மலை ஏற அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் முழக்கமிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
பாதுகாப்புப் படையின் கட்டுப்பாடு:
மலை மீது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், இப்போது அனைவரும் செல்ல வேண்டாம் என சிஆர்பிஎஃப் (CRPF) தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை ஏறுவதற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அந்த 50 பேர் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகல் 02.30 மணி முதல் 3 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிஆர்பிஎஃப் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
பக்தர்கள் வாக்குவாதம்:
கூட்டமாக திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற பக்தர்களை மத்திய மற்றும் மாநில காவல் படையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. திருப்பரங்குன்றம் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக, மலையேறும் 50 பேரைத் தேர்வு செய்வது மற்றும் அனுமதி நடைமுறைகள் தொடர்பாக காவல் துறை மற்றும் அமைப்பினரிடையே பேச்சுவார்த்தைகள் மற்றும் சலசலப்புகள் நீடித்து வருகின்றன