திருப்பரங்குன்றம் விவகாரம் : ஆட்சியை கலைக்க பாஜக மனு...தீபம் ஏற்றாததற்கு ஆட்சி கலைப்பு சாத்தியமா?

Su.tha Arivalagan
Nov 26, 2026,04:53 PM IST

சென்னை : திருப்பரங்குன்றம் மலை மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றததால், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதற்காக தவெக அரசை கலைக்க வேண்டும் என பாஜக சார்பில் ஆளுநர் அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியை கலைக்க முடியுமா? அரசியல் சாசான சட்டம் என்ன சொல்கிறது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.


உச்சநீதிமன்ற தீர்ப்பு :


திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கில் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், தீபத்தூண் விவகாரத்தில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த தடை உத்தரவு செல்லும். இருந்தாலும் கார்த்திகை தீபத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் குறிப்பிட்ட கல் தூணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கிறோம். இனி வரும் காலங்களில் என்ன செய்வது என்பது குறித்து பிறகு ஆலோசித்து, ஆய்வுகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி இருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்தது என்ன?





இதற்கிடையில் மதுரையில் அமல்படுத்தப்பட்ட 144 தடையை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பல பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. இந்த ஆண்டும் அவர்கள் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே மதுரை கலெக்டர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. 


கோர்ட் உத்தரவுப்படி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜரான மதுரை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்துள்ளனர். தீபம் ஏற்றுவது தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விபரங்களை நீதிபதிகள் கேட்டதற்கு, மாலை 4 மணிக்கு சமர்பிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை கலெக்டர், கோவில் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை, போலீசார் என நான்கு தரப்பு சார்பிலும் அரசு தரப்பில் ஒரே வழக்கறிஞர் ஆஜரானார். வேறு யாராவது ஆஜராக வேண்டும். யாராவது இருந்தால் அவர்கள் வரும் வரை தாங்கள் காத்திருக்க தயார் என நீதிபதிகள் கூறி உள்ளனர். தீபம் ஏற்றும் கோர்ட் உத்தரவை செயல்படுத்த போகிறீர்களா என கேட்டதற்கு, அரசு தரப்பில் ஆமாம் என கூறப்பட்டுள்ளது. இருந்தும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிபிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோர்ட் உத்தரவிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.


ஆட்சி கலைப்பு சாத்தியமா?


இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 365 ன் படி, அரசியலமைப்பின் எந்தவொரு விதியின் கீழும் மத்திய அரசு (Union) மற்றும் சுப்ரீம் கோர்ட் வழங்கும் நிர்வாக உத்தரவுகளுக்கு இணங்கவோ அல்லது அவற்றைச் செயல்படுத்தவோ ஒரு மாநில அரசு தவறினால், அந்த மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறவில்லை என்று குடியரசுத் தலைவர் கருத முடியும். சட்டப்பிரிவு 356-ஐப் (Article 356) பயன்படுத்தி அந்த மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் தவெக அரசை கலைக்க வேண்டும் என பாஜக ஆளுநரிடம் மனு அளித்து முறையீடு செய்துள்ளது. 


அதே போல் திமுக, ஆளுநரிடம் அளித்துள்ள மனுவும் சாதாரணமானது கிடையாது. அது மாநிலத்தின் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்ககோரிய மனு. ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலையும் போதும் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு ஒரு மாநில அரசை முடக்கவோ, கலைக்கவோ முடியும். 


மறுதேர்தல் வருமா?


பாஜக முயற்சித்து தவெக அரசை கலைத்தால், மறுதேர்தல் நடத்தப்படும் போது தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பலர் நினைக்கலாம். ஆனால் இந்த பிரிவின் படி நடவடிக்கை எடுத்தால் மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது, ஆட்சி கலைக்கப்படும். ஆனால் மாநிலத்தின் சட்டமன்றம் உயிர்ப்புடன் இருக்கும். அடுத்த 6 மாதங்கள் கவர்னர் அல்லது ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும். அந்த சமயத்தில் முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ., என எவருக்கும் அதிகாரம் இருக்காது. 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கவர்னர் ஆட்சி நீட்டிக்கப்படாவிட்டால் இந்த சட்டமன்றம் மீண்டும் உயிர்பெற்று, தவெக அரசு ஆட்சியை தொடர முடியும். ஒருவேளை கவர்னர் ஆட்சி தொடர்ந்தால், 6 மாதங்களுக்கு அன்றைய தேதியில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதோ அந்த கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அப்போது தவெக அல்லாமல் திமுக அல்லது அதிமுக.,விற்கு பெரும்பான்மை இருந்தால் அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். இதனால் தற்போது பாஜக, திமுக இரண்டு கட்சிகளுமே கவர்னரிடம் அளித்துள்ள மனு தவெக அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாகும்.