திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்: நீதிபதிகள் குழு அறிவிப்பு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் பார்த்திபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதியரசர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களும், பக்தர்கள் பலரும் மலை மீது ஏறுவதற்காக தீபம் ஏற்றுவதற்கான பொருட்களை ஊர்வலமாக சுமந்து சென்றனர்.
மலைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் :
மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுவதையொட்டி, திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும், நிகழ்வைச் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்கவும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம் :
மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தூணைச் சுற்றிலும் மூங்கில் கம்புகள் கொண்டு சாரம் அமைக்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்றக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற தவறியதற்காக, மதுரை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தமிழக அரசுக்கு மிக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன், திருப்பரங்குன்ற மலை மீது உடனடியாக தீபம் ஏற்றவும் உத்தரவிட்டது. தற்போது திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை ஆகியவை முழுவதும் மத்திய அரசின் சிஆர்பிஎஃப் வீரர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மோதல்கள், அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்குமோ என பலரும் அச்சம் தெரிவித்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படுவதைக் காண பெரும் திரளான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகின்றனர். பலர் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பாதுகாப்பு அளிக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் தீர்ப்பை நிறைவேற்ற வந்துள்ள நீதிபதிகள் குழுவிற்கு பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்துள்ளனர்.