திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

Su.tha Arivalagan
Jan 06, 2026,05:08 PM IST
சென்னை : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு தீர்வு வழங்கியது. அதில், திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் தான். அந்த தீபத் தூண் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. அதனால் அங்கு தீபம் ஏற்றலாம். இதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலை மீது ஒரே ஒரு நாள் தீபம் ஏற்றுவதால் பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என தமிழக அரசு கூறுவது அபத்தமானது. 



திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் செல்லக் கூடாது. தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை நிராகரித்து தேவஸ்தானம் கூறும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல. தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என கூறி தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக வழக்கை முடித்த வைத்ததுடன், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் கிடையாது. தனி மனிதர் ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத ஒரு வழக்கத்தை புகுத்தக் கூடாது. இது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் சொல்வது ஏற்புடையது ஆகாது. நிச்சயமாக இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதை காரணமாக வைத்து பாஜக, மதக்கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதனால் தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.