திருப்பரங்குன்றம் தீப திருவிழா: வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது
Nov 24, 2026,06:42 PM IST
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல் பல்வேறு மத அமைப்புக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தன. இதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மதுரை கலெக்டர் பிறப்பித்தார்.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற திருப்பரங்குன்றத்தில் ஏற்பாடுகள் நடைபெற்றது. மலையை சுற்றி அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து பிற்பகலில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜரானார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று மலை உச்சித் தூணில் விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்ற சூழலில், அந்த உத்தரவு உரிய முறையில் செயல்படுத்தப்படுமா என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசுத் தரப்பில் முக்கிய வாதம் முன்வைக்கப்பட்டது. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது வெறும் கல் தூண்தான் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அரசுத் தரப்பு வாதிட்டது.
இருப்பினும், இந்த வாதங்களைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் பல்வேறு தெளிவான கருத்துகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்ற நோக்கத்திற்காகச் சீராய்வு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே ஏற்கனவே பல உத்தரவுகளில் தெளிவுபடுத்தியுள்ளது என்பதை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒரு காரணமாகக் கூறி, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகளை வேறு எந்த அதிகாரியிடம் இருந்து வழங்கப்பட்டாலும், அவற்றை மாவட்ட ஆட்சியர் புறக்கணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இறுதியாக, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய உயர் நீதிமன்றக் கிளை, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இருக்கும் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.