திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்

Su.tha Arivalagan
Jan 16, 2026,10:10 AM IST

புதுடெல்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தமிழ் மறை நூலான திருக்குறளை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வரும் தை இரண்டாம் நாள் 'திருவள்ளுவர் தினமாக'க் கொண்டாடப்படுகிறது. இன்று (ஜனவரி 16, 2026) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது 'X' (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் திருவள்ளுவருக்கு வீரவணக்கம் செலுத்திப் பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவில், "பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவள்ளுவருக்கு இன்று நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகள் மற்றும் லட்சியங்கள் எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. நல்லிணக்கம் மற்றும் இரக்க குணமுள்ள ஒரு சமூகத்தை அவர் பெரிதும் நம்பினார். தமிழ் கலாச்சாரத்தின் மிகச்சிறந்த அடையாளமாக அவர் திகழ்கிறார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், "திருவள்ளுவரின் மேன்மையான அறிவுத்திறனைப் புரிந்துகொள்ளவும், வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் அனைவரும் திருக்குறளை வாசிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.




பிரதமர் மோடி, பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய மேடைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, ராணுவ வீரர்களிடையே பேசும் போது வீரத்தைப் பற்றிய குறள்களையும், உலகத் தலைவர்களிடையே பேசும் போது மனிதாபிமானம் மற்றும் அறநெறி சார்ந்த குறள்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழரின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த திருக்குறளின் அருமையை உலகறியச் செய்யும் முயற்சியாகப் பிரதமரின் இந்த வேண்டுகோள் பார்க்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.