திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- பாவை.பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ஐந்து இலவச மினி பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இதில் மூன்று பேருந்துகள் A/C வசதிகளோடு கூடியது.. பக்தர்களிடையே இந்த சேவை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சைவ தலம், இது பஞ்ச பூத தங்களின் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், நால்வராலும் பாடப்பெற்ற தலமாகவும், முக்கியமாக கிரிவலதிற்காகவே புகழ் பெற்ற தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காகவும், கிரிவலம் செல்ல வரும் பக்தர்களுக்காகவும் சேவையாற்ற கோவில் நிர்வாகம் சார்பில் 4 மினி பேருந்துகளும், நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு மினி பேருந்து என மொத்தம் ஐந்து பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இதில் மூன்று பேருந்துகள் அதாவது நம்பர் 1, 2, 3 ஆகிய பேருந்துகள் அண்ணாமலை கோவில் அடிவாரத்தில் (ராஜகோபுரம்) இருந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் கிரிவலமாக வருகிறது.. இந்த பேருந்துகள் சுற்றிவரும் கிரிவல பாதையில் ஆங்காங்கே உள்ள 8 அஷ்டலிங்கங்களை வழிபடும் வகையில் 10 நிமிடங்கள் வரை அங்கே நின்று செல்கிறது.. இந்த கிரிவலம் செல்லும் ழூன்று பேருந்துகளுக்கு மட்டும் A/C வசதி வழங்கப்பட்டுள்ளது.. கிரிவலம் ஆரம்பித்து சுற்றி முடிக்க தோராயமாக 2 மணிநேரத்தில் பேருந்து கிரிவலம் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிக்கிறது..
மற்ற இரண்டு பேருந்துகள் நம்பர் 4, 5. இவை பழைய பேருந்து நிலையம் மற்றும் புது பேருந்து நிலையத்திலிருந்து ராஜகோபுரம் வரை வந்து செல்கிறது.. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் தரிசனம் முடித்து செல்லும் பக்தர்களுக்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது..
இச்சேவை முக்கியமாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களின் கிரிவல கனவை நினைவாக்க தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. இவ்விரு வகை பேருந்துகளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சீரான இடைவெளியில் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் என்றும், கோயில் விஷேச நாட்களில் அதாவது பிரதோஷம், பெளர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் இச்சேவை இருக்காது என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.